காலா வுக்கும் பாட்ஷா வுக்கும் இடையே இத்தனை ஒற்றுமைகளா

சென்னை : பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' படம் வருகிற ஏப்ரல் 27-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ரஜினியுடன் ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, நானா படேகர் ஆகியோர் நடித்துள்ளனர். வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்துள்ளார்.

'காலா' படத்தின் போஸ்டர் 'பாட்ஷா' படத்தின் போஸ்டரை போல இருப்பதாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

ரஜினி நடித்த 'பாட்ஷா' திரைப்படம் 1995-ம் ஆண்டு வெளிவந்தது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இப்படத்தை ஆர்.எம்.வீரப்பன் தயாரித்திருந்தார். இதில் ரஜினியுடன் நக்மா, ரகுவரன், ஜனகராஜ், சரண்ராஜ், ஆனந்தராஜ் உள்பட பலர் நடித்திருந்தார்கள்.

ரஜினியின் பாட்ஷா திரைப்படம் மெகாஹிட் திரைப்படமாக வெற்றி கண்டது. 'பாட்ஷா' திரைப்படத்தில் பெரிய நாயுடன் இருப்பார் ரஜினி. காலா திரைப்படத்திலும் நாயுடன் போஸ் கொடுக்கிறார் ரஜினி. இரண்டு படங்களுக்கும் வேறு என்னவெல்லாம் ஒற்றுமை இருக்கிறது தெரியுமா?

காலா படத்தில் ரஜினிகாந்த் மும்பை தாதாவாக வருகிறார். பாட்ஷாவிலும் ரஜினி மும்பையின் நிழல் உலக தாதாவாகவே நடித்திருப்பார். பாட்ஷாவும், காலாவும் மும்பை தமிழர்களின் காட்பாதர்களாக தமிழர்களின் நம்பிக்கைக்குரியவர்களாகவே இருக்கிறார்கள்.

'பாட்ஷா' மற்றும் 'காலா' ஆகிய இரண்டு படங்களின் கதைக் களமும் தாராவி தான். காலாவின் நண்பராக சமுத்திரகனி நடிக்கிரார். பாட்ஷாவின் நண்பராக சரண்ராஜ் நடித்திருப்பார். இதுதான் இரண்டு படங்களுக்குமிடையே உள்ள வித்தியாசம்.

'பாட்ஷா' படத்தில் ரஜினிகாந்த் கோட் சூட் அணிந்த தாதாவாக நடித்திருப்பார். பின்னாளில் ஆட்டோக்காரராக தன் வாழ்க்கையை மாற்றிக்கொள்வார். 'காலா' படத்தில் வேட்டி சட்டை அணிந்த தாதாவாக வருகிறார் ரஜினி.

'பாட்ஷா' வெள்ளி விழா கண்ட படம். 'காலா' வெள்ளி விழா காணுமா என்பது ஏப்ரல் மாத இறுதியில் தெரியும். 'கபாலி' படத்திற்குப் பிறகு ரஜினி நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.