வருமான வரி சோதனை தீபாவின் தில்லாலங்கடியா போலீஸிடமிருந்து போலி அதிகாரி தப்பியது எப்படி

தீபாவின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்வதாக கூறி உள்ளே புகுந்த போலி அதிகாரி தப்பிய விவகாரம் பல கேள்விகளை எழுப்புகிறது.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. இவர் சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் வசித்துவருகிறார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு பல அரசியல் கூத்துகள் அரங்கேறின. ஜெ.,வின் மறைவிற்கு பிறகு தான் தீபா வெளிவந்தார். அதிமுகவிற்கும் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கும் உரிமை கோரினார். 

பின்னர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற இயக்கத்தை தொடங்கினார். தனது வீட்டிலும் அலுவலகத்திலும் சிலர் கற்களை வீசுவதாக தி.நகர் காவல் நிலையத்தில் புகார்களையும் அளித்துவந்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் ஒருமுறை சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் அவரது பணியாளர்களே நாற்காலிகளை தூக்கி வீசிய சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. இதையடுத்து தன்னுடன் உள்ளவர்களை யாரோ ஏவிவிடுகிறார்கள் என்றார் தீபா.

 

 

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார். இப்படியாக பரபரப்பை கிளப்பிக்கொண்டே இருந்தார் தீபா. இந்நிலையில், தீபாவின் வீட்டில் வருமான வரி சோதனை என்ற பெயரில் வந்த போலி அதிகாரி, போலீஸிடமிருந்து தப்பியுள்ளார். இந்த சம்பவம் நடந்தபோது தீபா வீட்டில் இல்லை.

இன்று காலை 7 மணி அளவில் தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டிற்கு வந்த மிதேஷ் குமார் என்ற நபர், தான் ஒரு வருமான வரித்துறை அதிகாரி என கூறி சோதனை நடத்தியுள்ளார். அவர் அடையாள அட்டையை காட்டியதால் தீபாவின் கணவர் மாதவன் அவரை சோதனை செய்ய அனுமதித்ததாக கூறியுள்ளார்.

ஆனாலும் அவர் மீது எழுந்த சந்தேகத்தை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, தி.நகர் போலீசார் அங்கு சென்று வருமான வரி அதிகாரி என கூறியவரிடம் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரித்துக் கொண்டிருந்தபோதே அந்த நபர் தப்பியோடிவிட்டார். போலீசார் விரட்டி சென்றும் பிடிக்க முடியவில்லை. சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

கேள்வி 1: தீபா வீட்டில் இல்லாதபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. பரபரப்பை கிளப்ப, தன் மீது வெளிச்சம் பட தீபாவே ஆள் வைத்து இப்படியொரு தில்லாலங்கடி வேலையை செய்தாரா?

கேள்வி 2: காலை 7 மணிக்கு தீபாவின் வீட்டிற்குள் மிதேஷ் குமார் என்ற போலி அதிகாரி புகுந்துள்ளார். ஆனால் 10 மணியளவில் தான் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வந்துள்ளார்கள். அதற்கு முன்னதாக இருந்த 3 மணி நேரம் வரையில் அந்த நபர் மீது தீபாவின் கணவருக்கோ வீட்டில் இருந்தவர்களுக்கோ அவர் மீது சந்தேகம் எழவில்லையா?

கேள்வி 3: தகவலறிந்து வந்த போலீசார், அந்த நபரிடம் விசாரித்து கொண்டிருந்தபோது அவர் தப்பியுள்ளார். சுமார் 10 போலீசார் தீபாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்களை மீறி அந்த நபர் தப்பியது எப்படி? அப்படியென்றால் அவர் தப்பித்தாரா? தப்பிக்க வைக்கப்பட்டாரா?

இப்படியாக அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.