12 ஆண்டுகளுக்கு பிறகு அறிவாலயத்தில் வைகோ திமுக தலைமையில் ஓரணியில் திரளும் எதிர்க்கட்சிகள்

பேருந்து கட்டண உயர்வு, நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க திமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெறுகிறது.

ஜெயலலிதா எதிர்த்த மத்திய அரசின் பல திட்டங்களை அவர் இறந்தபிறகு, தமிழக அரசு ஏற்றுக்கொண்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. மேலும் மாநில சுயாட்சியை விட்டுக்கொடுத்து மக்கள் விரோத அரசாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

 

குறிப்பாக நீட் தேர்வு, உதய் மின் திட்டம், ஜிஎஸ்டி, தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் தமிழக அரசின் நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

இந்நிலையில், தற்போது மக்கள் தலையில் ஒரேயடியாக சுமையை ஏற்றும் பொருட்டு 50 முதல் 100% வரை பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதற்கும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், பேருந்து கட்டண உயர்வு, நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் அடுத்தகட்டமாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசிக்கின்றன. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.

சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா அறிவாலயத்திற்கு வைகோ சென்றுள்ளார். முதல்வர் பழனிசாமி ஆட்சிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.