அமெரிக்கா சிறந்த நாடு என்ற பெயரை இழந்து விட்டது டிரம்ப்பே சொல்கிறார்

வாஷிங்டன்: அமெரிக்கர்களின் நலனுக்காக வேற்றுமைகளையும், கருத்து வேறுபாடுகளையும் மறந்து அரசுடன் எதிர்க்கட்சிகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் கடந்த வருடம் பொறுப்பேற்று கொண்டார். இந்த நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்த கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளின் உறுப்பினர்கள் முன் டிரம்ப் முதல்முறையாக உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், வேற்றுமையை மறந்து அனைவரும் கைக்கோர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளை வலியுறுத்தினார்.

வேற்றுமையை மறந்துவிடுங்கள் 
அமெரிக்காவுக்காக ஒன்றிணையுங்கள்

அமெரிக்கா அமெரிக்கர்களுக்கு என்பதை என்றும் மறக்க கூடாது என்றும், தம்முடைய அரசால் லட்சக்கணக்கில் வேலைவாய்ப்பு அமெரிக்கர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் நம்முடைய வேற்றுமைகளை புறந்தள்ளி வைத்து விட்டு மக்கள் எதற்காக நம்மை தேர்வு செய்து இருக்கிறார்களோ அதற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகளுக்கு அவர் கேட்டுக்கொண்டார்.

மெரிட் இமிக்ரேஷன் 
திறமையானவர்களுக்கு வாய்ப்பு

மேலும் பேசிய அவர், அமெரிக்காவில் பணிக்கு வரும் நபர்களை அறிவு மற்றும் பணித்திறனின் அடிப்படையில் அனுமதிக்கும் முறையை கையாளவேண்டிய கட்டாயத்தில் அரசு இருப்பதாக தெரிவித்தார். மேலும் மெரிட் சிஸ்டம் எனப்படும் இதில் திறமை வாய்ந்தவர்களுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

செயின் இமிக்ரேஷன் 
குடும்பத்தினருக்கு சிக்கலா?

மெரிட் இமிக்ரேஷனில் ஆசிய மக்கள் நிறைய பேருக்கு வாய்ப்பிருக்கும் நிலையில், அவர்களின் குடும்பத்தினரும் அவர்களுடன் தங்குவதில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் டிரம்ப தெரிவித்தார். அமெரிக்காவில் தஞ்சமடையும் 'செயின் இமிக்ரேஷன்' என்ற முறை பரிசீலிக்கப்பட வேண்டியுள்ளது என்றும், அனைவருக்கும் அனைத்தும் கிடைத்து விடாது என்பது உலக நியதி என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்கா சிறந்த நாடா? 
பகிரங்கமாக ஒப்புக்கொண்ட டிரம்ப்

மேலும் பேசிய அவர் அமெரிக்கா சிறந்த நாடு என்ற பெயரை சில ஆண்டுகளாக இழந்து இருந்தது என்றும், விரைவில் அந்த பெயரை மீண்டும் பெற அயராது உழைப்பேன் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா சிறந்த நாடு இல்லை என்பதை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் டிரம்ப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

 

ஐஸ் தீவிரவாதிகள் 
டிரம்ப் சூளுரை

ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்கும் வரை அமெரிக்க அரசு ஓயாது என்று கூறிய டிரம்ப், தனது முயற்சியால் முக்கால்வாசி ஐஎஸ் தீவிரவாதிகள் ஒழிக்கப்பட்டு விட்டதாக கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சியினர் நாட்டின் நலத்திட்டங்களுக்கு செலவிட வேண்டிய பல ஆயிரம் கோடி டாலர்கள் போருக்காக செலவழிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினர்.

புறக்கணித்த எதிர்க்கட்சியினர் 
டிரம்ப் உரைக்கு கண்டனம்

இந்த கூட்டத்தினையும், டிரம்பின் உரைக்கு கண்டனம் தெரிவித்தும் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களில் 12க்கும் மேற்பட்டோர் வெளிநடப்பு செய்தனர். மேலும் டிரம்பின் பேச்சில் உடன்பாடு இல்லாததே இந்த புறக்கணிப்புக்கு காரணம் என்றும் அவர்கள் விளக்கமளித்தனர். அவர்களில் இந்திய அமெரிக்கரான பிரமீளா ஜெயபாலும் ஒருவர் ஆவார்.