ஒரே ஒரு தடவ கர்நாடகாவுல போயி நான் ஒரு தமிழன் னு ரஜினியால் சொல்ல முடியுமா சீமான்

தன்னை ஒரு பச்சைத் தமிழன் என்று கூறும் ரஜினிகாந்த், அதை ஒரே ஒருமுறை கர்நாடகாவில் சொல்ல முடியுமா என சீமான் சவால் விடுத்துள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவிவந்தது. இந்நிலையில், கடந்த மே மாதம் தனது ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், போர் வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என தெரிவித்திருந்தார். ரஜினியின் அந்த பேச்சு, அவரது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்தது. அப்போது பேசிய ரஜினிகாந்த், தான் ஒரு பச்சைத் தமிழன் என்றும் தனது சொந்த ஊர் கிருஷ்ணகிரி என்றும் தனது குடும்பம் பிழைப்பிற்காகவே கர்நாடகா சென்றதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்தார். கருணாநிதியும் ஜெயலலிதாவும் அரசியல் களத்தில் இல்லாத நிலையில், ரஜினியும் கமலும் அரசியலில் குதிக்கின்றனர்.

ரஜினியின் அரசியல் வருகைக்கு அவரது ரசிகர்களிடையே வரவேற்பு இருந்தாலும் எதிர்ப்புகளும் பரவலாக இருக்கின்றன. ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கடுமையாக எதிர்ப்பவர்களில் முதன்மையானவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவார்.

தன்னை பச்சைத்தமிழன் என கூறிய ரஜினிகாந்திற்கு சீமான் சவால் ஒன்றை விடுத்துள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த சீமான், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் வசிக்கும் ரஜினிகாந்த், ஒருமுறை கூட தன்னை தமிழன் என கூறிக்கொண்டதில்லை. ஆனால் தமிழக மக்களை ஆள வேண்டும் என்ற எண்ணம் ரஜினிக்கு எப்போது வந்ததோ, அதன்பிறகு தான் தன்னை ஒரு தமிழன் என கூறிக்கொள்கிறார். தன்னை பச்சைத்தமிழன் என கூறிக்கொள்ளும் ரஜினிகாந்த், கர்நாடாகவுக்கு சென்று தன்னை தமிழன் என கூறவிட்டு வர சொல்லுங்க பார்ப்போம். இதை அவருக்கு சவாலாகவே விடுக்கிறேன் என சீமான் தெரிவித்துள்ளார்.

சீமானின் சவாலை ரஜினி ஏற்பாரா?