இதுக்கா இம்புட்டு அக்கப்போரு நீங்க புடுங்குன எல்லாமே தேவையில்லாத ஆணி

சென்னை : சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர், அதிதி ராவ் ஆகியோர் நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் 'பத்மாவத்'. முன்பு 'பத்மாவதி' என டைட்டில் வைக்கப்பட்டு பலத்த எதிர்ப்பால் சற்றே மாறி 'பத்மாவத்' ஆகியிருக்கிறது.

இந்தப் படம் ராஜபுத்திர அரசி பத்மாவதியை தவறாகச் சித்தரிப்பதாகக் கூறி ராஜபுத்திர சமூகத்தினர் பல மாநிலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சில மாநிலங்கள் 'பத்மாவத்' படத்திற்குத் தடை விதிக்கப்பட்டு பிறகு சுப்ரீம் கோர்ட் உத்தரவால் இன்று வெளியாகியிருக்கிறது 'பத்மாவத்'.

திரையிடலுக்குப் பின்பும் சில மாநிலங்களில் வன்முறை உச்சம் பெற்றுள்ளது. பிரிமீயர் ஷோ திரையிடப்பட்ட தியேட்டர்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன; தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. வன்முறையாளர்களின் அச்சுறுத்தலால் வட மாநிலங்களில் பல திரையரங்குகள் படத்தை வெளியிட மறுத்திருக்கின்றன.

இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியில் இன்று பலத்த எதிர்பார்ப்புடன் வெளியானது பத்மாவத் படம். தமிழகத்தில் இந்தப் படத்திற்கு பெரிய அளவில் எதிர்ப்புகள் இல்லையென்றாலும், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இன்றும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் 'பத்மாவத்' பட எதிர்ப்பாளர்கள்.

ராஜபுத்திர சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் அளவுக்கு இந்தப் படத்தில் பத்மாவதியையோ, ராஜபுத்திரர்களையோ தவறாகச் சித்தரிக்கவில்லை. படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை ராஜபுத்திரர்களை உயர்த்தித் தான் பிடித்துள்ளனர்.

 

ராஜபுத்திர அரசி பத்மாவதியை தவறாகச் சித்தரிக்கவில்லை என சஞ்சய் லீலா பன்சாலி பலமுறை கூறியும், ஏற்க மறுத்து வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள்தான் முதலில் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்.

ராஜபுத்திரர்கள் வீரம் செறிந்தவர்கள்; ராஜபுத்திர பெண்களும், ராஜபுத்திர ஆண்களுக்கு நிகரான வீரம் கொண்டவர்கள்; ராஜபுத்திரர்கள் கொள்கை நெறி வழுவாதவர்கள்; நம்பிக்கைத் துரோகம் புரிந்திடாதவர்கள்; கணவன் தவிர மற்றவனின் நிழல் கூடத் தம்மீது விழ அனுமதிக்காதவர்கள்' என்கிற பிம்பங்கள் தான் படம் முழுவதும் பதிய வைக்கப்படுகின்றன.

'பத்மாவத்' படத்தின் பல காட்சிகள் சென்சார் போர்டு பரிந்துரைப்படி கட் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எப்படி இருப்பினும், படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ராஜபுத்திர சமூகத்தினர் பெருமை கொள்ளும் விதமாக வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தால் பத்மாவதியை தவறாகச் சித்தரிப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை.

படத்தில், அலாவுதீன் கில்ஜியின் மனைவி மெஹ்ரூன் நிஷாவாக வரும் அதிதி ராவ், ராஜபுத்திர அரசன் ரத்தன் சிங்கையும், பத்மாவதியையும் தப்பிக்க உதவி செய்வார். ஆனால், அப்போது கூட 'ராஜபுத்திரர்கள் பயந்து ஓட மாட்டார்கள்' எனக்கூறி அலாவுதீனைச் சென்று சந்திப்பார் ரத்தன் சிங்.

படத்தில் அலாவுதீன் கில்ஜிதான் பெண் பித்தராகவும், பேராசைக் காரராகவும், எதிரியை சூழ்ச்சியால் வெல்பவராகவும், மாற்றான் மனைவியை அடையத் துடிப்பவராகவும் காட்டியிருக்கிறார்கள். பிறகு ஏன் ராஜபுத்திரர்கள் இப்படி வரிந்துகட்டிக்கொண்டு இறங்கியிருக்கிறார்கள்?

பன்சாலி, ராஜபுத்திரர்களைத் தவறாகச் சித்தரிக்கவில்லை எனச் சொல்லியும் எதிர்ப்பதற்குக் காரணம், 'பத்மாவத்' படம் ஒரு முஸ்லீம் கவிஞரின் கவிதையைக் கொண்டு எடுக்கப்பட்டதால் தானா எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்