நாளை பந்த் பேருந்துகள் ஓடாது பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வெளியான பரபரப்புத் தகவல்

மகதாயி நதிநீர் விவகாரம் குறித்து பெங்களூர் உட்பட கர்நாடக மாநிலம் முழுவதுமே நாளை பந்த் நடைபெற உள்ளது. இதனால் பேருந்து சேவைகள் பாதிக்கப்படும், எனவே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட உள்ளது. 

கோவா-கர்நாடகா ஆகிய மாநிலங்களின் இடையே மகதாயி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தொடர்ந்து மோதல் போக்கு நிலவுகிறது. கர்நாடகாவில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், மத்தியில் ஆளும் பா.ஜ.கவிற்கு கடும் நெருக்கடியை கொடுத்து காரியம் சாதித்து விட வேண்டும் என்று கன்னட அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

இதன் ஒரு பகுதியாகத் தான் நாளை கர்நாடக மாநிலத்தில் பந்த் நடத்த 2000க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள் இணைந்து அழைப்புவிடுத்துள்ளன.

கன்னட சலுவளி வாட்டாள் என்ற கட்சியின் தலைவரான வாட்டாள் நாகராஜ் கன்னட அமைப்புகளை ஒருங்கிணைத்து பந்த்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த பந்த் மிக வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்ற அக்கறை, மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் இருக்கும் என்பதால், மறைமுகமாக, அரசும் நாளை நடைபெற இருக்கும் இத்தகைய பந்த்துக்கு ஆதரவு அளிக்கும் என்பது கன்னட அமைப்பினர் நம்பிக்கை.

மேலும் நாளை நடக்க இருக்கும் பந்த்துக்கு கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் மற்றும் பெங்களூர் மாநகர போக்குவரத்து கழகம் ஆகியவை ஆதரவளிக்க முடிவு செய்துள்ளன. ஆனால் இதுவரை வெளிப்படையாக அதை பற்றி அறிவிக்கவில்லை. 

தமிழக பேருந்துகள் அனைத்தும் காலை 6 மணிக்கு மேல் கர்நாடக எல்லைக்குள் வராது என்று கூறப்படுகிறது. அது போன்றே மாலை 6 மணிக்கு பின்னர் தான் கர்நாடகாவில் இருந்து தமிழக பேருந்துகள் கிளம்ப முடியும். 

மேலும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்க தனியார் பள்ளி கூட்டமைப்புகள் முடிவு செய்துள்ளது. அது போல அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுமா என்பதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள்தான் நாளை முடிவு செய்வார்கள். அதோடு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

லாரி, ஓலா மற்றும் ஊபர் போன்ற டாக்சி உரிமையாளர்கள் சங்கங்கள் பந்த்துக்கு ஆதரவு அளிக்கவில்லை. இதனால் அவர்களுடன் கன்னட அமைப்பினர் இன்று மதியம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அப்போது அவர்கள் தங்களது பந்த்துக்கு ஆதரவு அளிக்க கோரிக்கைவிடுப்பார்கள். 

அதனடிப்படையில், நாளைய ஸ்டிரைக்கிற்கு அந்த சங்கத்தினர் தங்களது ஆதரவை அளிப்பார்களா அல்லது இல்லையா என்பது இன்று மாலையில் தெரிய வரும்.

இதற்கிடையே வரும் பிப்ரவரி மாதம் 4ம் தேதி பெங்களூர் பந்த்துக்கும் கன்னட அமைப்பினர் அழைப்புவிடுத்துள்ளனர். அன்றைய தினம் பெங்களூரில் மட்டும் ஸ்டிரைக் நடைபெறும். பா.ஜ.கவின் நிகழ்ச்சி ஒன்றிற்காக பிரதமர் மோடி பிப்ரவரி 4ம் தேதி பெங்களூர் வர உள்ளதால், அன்றைய தினம் ஒரு பந்த் நடத்த கன்னட அமைப்பினர் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது