நாராச உரையாடல்களைப் பரப்பிவரும் நித்தியை கைது பண்ணனும் விடுதலைத் தமிழ் புலிகள்

வைரமுத்துவை நித்தியானந்தாவின் சீடர்கள் அவதூறாகப் பேசிய வீடியோக்கள் வெளியாகிய நிலையில், நித்தியானந்தாவைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்து நிகழ்ச்சியில் தமிழை ஆண்டாள் என்கிற தலைப்பில் உரையாற்றினார். அவரது பேச்சு சர்ச்சைக்குள்ளாகவே பல்வேறு இந்துத்துவ அமைப்பினரும் வைரமுத்துவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களாக நித்தியானந்தாவின் சீடர்கள் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கவிஞர் வைரமுத்துவை ஆபாசம் கொப்பளிக்கும் வார்த்தைகளால் திட்டி வீடியோக்களைப் பதிவேற்றி வருகின்றனர்.

 

 

இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில்  வைரளாகி வருகின்றன. இதையடுத்து நித்தியானந்தாவைக் கண்டித்து வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படி சிறுமிகளை வைத்துக்கொண்டு இந்து மத வழிவாடு என்ற பெயரில் ஆபாசமாக வலைதளங்களில் பதிவிடும் நித்தியை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் வட்டாரத்திலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பலமாக ஒலித்து வருகின்றது.

 

 

இந்நிலையில், நேற்று முன்தினம் நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் விடுதலைத் தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் நித்தியானந்தாவைக் கைது செய்ய வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், தமிழின், தமிழகத்தின் பக்தி இயக்கக் கவிகளில் முன்னோடியானவரான ஆண்டாள் பற்றி கவிஞர் வைரமுத்துவின் பாராட்டுரைகளுக்கு மத்தியில் இடம்பெற்றுள்ள அந்த தேவையற்ற ஆய்வைப் புறந்தள்ள வேண்டும் என தீர்மானத்தில் இடம்பெற்றிருந்தது. அதேநேரத்தில், வைரமுத்துவை எதிர்க்கிறோம் என்ற பெயரில் ஆபாசத்தின் உச்சிக்கே சென்று அருவருக்கத்தக்க வகையில் பேசி வரும் பாஜகவின் தேசியதலைவரான ஹெச்.ராஜாவை வன்மையாக கண்டிக்கின்றோம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், “இந்த விஷயத்தில் இந்து தர்மம் என்ற பெயரில் நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து வெளியாகும் வீடியோக்களில் பெரும்பாலான இந்துக்களை முகம் சுளிக்கச் செய்யும் வகையில் கருத்துகளை வெளியிடுவதையும் கண்டிக்கின்றோம். இந்திய இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும், அமைதிக்கும் பங்கம் ஏற்படுத்தும் வகையில் பொதுவெளியில் நாராச உரையாடல்களைப் பரப்பிவரும் நித்தியானந்தாவை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், நித்தியானந்தா ஆசிரமத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி கர்நாடக மாநில காவல்துறைக்குக் கடிதம் எழுதியுள்ளார். தனது கடிதத்தில், “ஆண்டாள் விவகாரத்தில் நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து பேசும் சிறுமிகள் வைரமுத்துவைக் கடுமையான வார்த்தைகளால் திட்டிவருகின்றனர். அவர்கள் தங்களை நித்தியானந்தா ஆசிரமத்தில் வசிக்கும் சந்நியாசிகள் என்றும் அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். இவ்வாறு சிறுமிகளைப் பயன்படுத்தி மோசமான விமர்சனங்களை பரப்பிவரும் நித்தியானந்தா ஆசிரமத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தோர் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி கலக்கத்தில் ரசிகர்கள்