எச்சரிக்கை பதிவு பிஞ்சிலேயே வெம்பிப் போனால் கனி முற்றி அழுகி குப்பையிலும் தான் கொட்ட முடியும்

கடந்த வாரம், பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள், இரவு 10 மணிக்கு, பொங்கலுக்கு என்னென்ன செய்யலாம் என்று குடும்பத்துடன் பேசிக் கொண்டு இருந்த போது, என் நெருங்கிய நண்பரிடமிருந்து அலைபேசி விடாமல் அடித்துக் கொண்டேயிருந்தது. பொங்கல் வாழ்த்தைச் சொல்லக் கூப்பிடுகிறார் என்று, நான் ஃபோனை ஆன் பண்ணி பொங்கல் வாழ்த்துச் சொன்னேன்.
    
அவரோ, “சார், என் பையனை நேற்றிலிருந்து காணவில்லை, எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கு” என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பேசும் போதே அழுது விட்டார். எனக்கு மனசு கேட்கவில்லை. சரி, நேரில் போய்ப் பேசலாம், என்று 15 கி.மீ. தொலைவில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற போது, அவா்கள் வீடு, மிக நிசப்தமாக இருந்தது. வீட்டினுள் அவரது மனைவி அழுது கொண்டிருக்கும் சத்தம் மெதுவாய் கேட்டது. வீட்டில், அவரது உறவினா்கள் நாலைந்து போ் கூடியிருந்தனா்.

என்னவென்று விசாரித்த போது, முதல் நாள் அவா் வீட்டிற்கு வரும் போது, ப்ளஸ் டூ படிக்கும் அவரது மகன், ஒரு சந்துக்குள் உள்ள பெட்டிக் கடையில் சிகரெட் குடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும், அவருக்கு கோபம் வந்து விட, அவன் வீட்டிற்கு வந்ததும், அடித்து நொறுக்கி விட்டாராம்.
 
அதனால், கோபித்துக் கொண்டு, வெளியே போனவன் என்ன ஆனான் என்று தெரியவில்லை. அவன் வீட்டை விட்டு வெளியேறும் போது, அவனிடம் ஒரு ரூபாய் கூட சட்டைப் பையில் இல்லை. எங்கே போனான்? என்று தவித்துப் போனார்.
    
என்ன இருந்தாலும் பெற்றவா் அல்லவா?, மேற் கொண்டு பேசி நேரத்தை வீணடிக்காமல், அவரை அழைத்துக் கொண்டு, அவா் பையனுடன் படித்த, பழகிய நண்பா்களை் வீட்டிற்கெல்லாம் சென்று விசாரித்தோம். யாரும் அவனைப் பார்க்கவில்லை என்று சொல்லி விட்டார்கள்.

பொங்கல் தினம் வந்து காலை 11 மணி வரை, நாங்கள் சுற்றிக் கொண்டிருந்தோம். பிறகு, நண்பரைத் தேற்றி, தேநீா் அருந்தி விட்டு, அவா் வீட்டிற்கு அருகில் இருந்த காவல் நிலையத்தில் அவனது புகைப்படத்தைக் கொடுத்து, புகாரையும் பதிவு செய்து விட்டு, வீட்டிற்கு கிளம்பினேன்.
    
இரவு முழுக்கத் துாங்காமல் அலைந்ததால், சோர்ந்து போய் படுத்து உறங்கி விட்டேன். மாலை 4 மணிக்கு நண்பா் மீண்டும் ஃபோன் பண்ணினார். அவரது பையன் குன்னுாரில் இருக்கிறான் என்றும், அவனது அம்மாவிற்கு ஃபோன் பண்ணிப் பேசினான் என்றும் சொல்லி, குன்னுாருக்கு போய் வரலாம் என்றார். நானும் வீட்டில் சொல்லி விட்டு, நண்பரின் காரில் குன்னுாருக்குப் பயணம் ஆனோம்.
    
வீட்டை விட்டுச் சென்ற அவரது மகன் அழுது கொண்டே போகும் போது, அவனுடன் எட்டாவது வரை படித்த பால்ய நண்பன், அவனை தற்செயலாகச் சாலையில் பார்த்திருக்கிறான். அந்தப் பையன் குன்னுாரில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்கிறானாம். பிறகு இவன் கதையைக் கேட்டு, இவனைக் குன்னுாருக்கு அழைத்துச் சென்று, அங்கு அவன் வேலை பார்க்கும் ஓட்டலிலேயே வேலைக்குச் சோ்த்து விட்டிருக்கிறான்.

இரண்டு நாள், கடுமையாக வேலை பார்த்த, நண்பரின் மகன், வீட்டு நினைவு வர, அவனது அம்மாவிற்கு ஃபோன் பண்ணிப் பேசியிருக்கிறான். அவன் வேலை பார்க்கும் ஓட்டலின் ஃபோன் நம்பரை வாங்கி, அதன் முதலாளியிடம் விஷயத்தைச் சொல்லி, அவனைப் பாதுகாத்துக் கொள்ளும் படி வேண்டுகோல் விடுத்து விட்டு, குன்னுார் போய்ச் சேர்ந்து, அவனைச் சமாதானம் செய்து ஒரு வழியாக அழைத்துக் கொண்டு ஊா் வந்து சோ்ந்தோம்.
    
சுப்பிரமணியன் என்ற அந்த நண்பரின் மகனைத் தனியாக அழைத்துச் சென்று கேட்டேன். “நீ நல்லவன் தானேடா, எதுக்காக திடீா்னு சிகரெட் பிடிச்சே” என்றேன். அதற்கு அவன், “அங்கிள் என் கிளாஸ்மேட்ஸ் சில போ் கட்டாயப்படுத்தி என்னைப் புகைக்க வச்சாங்க. ஆரம்பத்தில் பிடிக்கலே, அப்புறம் அது இல்லாமல் என்னாலே இருக்க முடியலே. ஒரு வருசமா இந்தப் பழக்கம் என்றான்”.
    
எனக்குத் துாக்கி வாரிப் போட்டது. சோ்க்கை சரியில்லாததால், பிஞ்சிலேயே வெம்பிப் போனால், கனி முற்றி அழுகி, சாக்கடையிலும், குப்பையிலும் தான் கொட்ட முடியும். எங்கே போய்க் கொண்டிருக்கிறார்கள் “ஆண்” மாணவா்கள்?

 

தனது13 வயது மகளை பணத்திற்காக வாலிபருடன் உறவு கொள்ள வைத்த தாய் பிறகு என்ன நடந்தது