7 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நிகழும் அதிசயம் ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்

சென்னை: 2018-ம் ஆண்டு தமிழ் சினிமா பெரும் எதிர்பார்ப்பு மிகுந்ததாக இருக்கிறது. ஏனெனில், இந்தாண்டு முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களும் வெளியாக இருக்கின்றன.

கடந்த 7 வருடங்களுக்கு பிறகு முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்கள் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது.

ஆகையால், உச்ச நட்சத்திரங்களின் ரசிகர்கள் முதல், இளம் நாயகர்களின் ரசிகர்கள் வரை இந்த வருடத்தை அதிக எதிர்பார்ப்புடன் தொடங்கி இருக்கிறார்கள்.

ரஜினி நடிப்பில் ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில் ஏப்ரலில் வெளியாகக் காத்திருக்கும் '2.O', ரஞ்சித் இயக்கத்தில் எதிர்பார்ப்பு மிகுந்திருக்கும் 'காலா' ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. 
கமல்ஹாசன் நடிப்பில் 'விஸ்வரூபம் 2', 'சபாஷ் நாயுடு' ஆகிய படங்கள் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் 'தளபதி 62' படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. 
சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக இணைந்திருக்கும் 'விசுவாசம்' திரைப்படமும் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் தல ரசிகர்களுக்கும் ஏக குஷி.

சூர்யா நடிப்பில் 'தானா சேர்ந்த கூட்டம்' பொங்கலுக்கு ரிலீஸான நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடிக்கும் 'சூர்யா 36' படம் தீபாவளிக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் நடித்த 'ஸ்கெட்ச்' திரைப்படம் ரிலீஸாகியிருக்கும் நிலையில் 'சாமி 2', 'துருவ நட்சத்திரம்' ஆகிய திரைப்படங்கள் இந்த ஆண்டு ரிலீஸாக இருக்கின்றன. ஆக, சீயானுக்கு இந்த ஆண்டு ட்ரிபிள் ட்ரீட்.

கடந்த 2017-ம் வருடத்தில், ரஜினி, கமல், விக்ரம் ஆகியோரின் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. 2016-ம் ஆண்டு அஜித் படம் ரிலீஸ் ஆகவில்லை. 2015-ம் ஆண்டு ரஜினி படம் ரிலீஸ் ஆகவில்லை.

2014-ல் கமல்ஹாசன், விக்ரம் படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. 2013-ல் ரஜினி படம் ரிலீஸ் ஆகவில்லை. 2012-ம் ஆண்டு ரஜினி, கமல் படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. 2011-ம் வருடத்தில் ரஜினி, கமல் படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. இந்த ஆண்டுதான் எல்லோருடைய படங்களும் வெளியாக இருக்கின்றன.

தனுஷின் 'வட சென்னை', 'மாரி 2' ஆகிய படங்களும் இந்த ஆண்டில் வெளியாகும். விஜய் சேதுபதிக்கு அரை டஜன் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை இந்த ஆண்டே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்கள் தவிர சிம்பு, சிவகார்த்திகேயன், கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவா, ஜோதிகா, நயன்தாரா, த்ரிஷா போன்ற முன்னணி நடிகர் நடிகைகளின் படங்களும் வெளியாக இருக்கிறது. ஆகையால், இந்த வருடம் முழுவதும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தொடர்ச்சியான கொண்டாட்டம் தான்.