பெனாசீர் பூட்டோவை கொன்றது நாங்கள் தான் 10 ஆண்டுகளுக்குப் பின் பொறுப்பேற்ற தாலிபன்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ படுகொலைக்கு தாலிபன் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தகவலை தாலிபன் அமைப்பின் மூத்தத் தலைவர் அபு மன்சூர் அசிம் முஃப்தி நூர் வாலி எழுதியுள்ள புத்தகத்தில் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார். துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் பெனாசீர் பூட்டோவுடன் 20 பேர் பலியாகினர்.

பெனாசீர் பூட்டோ படுகொலைக்கும் அப்போதைய ஜனாதிபதி பர்வேஷ் முஷரபிற்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கு விசாரணை முடிவில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 தலிபான் பயங்கரவாதிகளும் விடுதலை செய்யப்பட்டனர்.

போலீஸ் அதிகாரிகளுக்கு மட்டும் பணியில் அலட்சியமாக இருந்ததாக இரு அதிகாரிகளுக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரப் இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இப்போது பெனசீர் பூட்டோ கொலை செய்யப்பட்டதற்கு தலிபான் பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்று உள்ளது.

'இன்குலாப் மெஹ்சூத் சௌத் வஜிரிஸ்தான் - பிரிட்டிஷ் ராஜ் முதல் அமெரிக்க ஏகாதிபத்தியம் வரை' என்ற தலைப்பில் தலிபான் தலைவன் அபு மன்சூர் அசிம் முப்தி எழுதிய புத்தகத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக டெய்லி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த புத்தகத்தில் தற்கொலைப் படை வீரர் பிலால் முதலில் பூட்டோவை துப்பாக்கியால் சுட்டதில் அவருடைய கழுத்துப் பகுதியில் குண்டு பாய்ந்ததாகவும், அதன் பிறகு தான் அணிந்திருந்த வெடிகுண்டு ஜாக்கெட்டை வெடிக்கச் செய்து படுகொலை செய்ததாகவும் அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக டெய்லி டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த படுகொலைக்கு முன்னரே இரண்டு முறை பெனாசீர் பூட்டோவை கொல்ல தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டதாக புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007 அக்டோபர் மாதத்தில் கராச்சியில் நடந்த தாக்குதலில் பெனாசீர் உயிர் தப்ப 140 பேர் மட்டும் உயிரிழந்தனர். ஆனால் அதன் பிறகும் அரசு பெனசீர் பூட்டோவின் பாதுகாப்பை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பெனாசீர் பூட்டோவை படுகொலை செய்தது ஏன் என்ற விவரங்கள் எதுவும் புத்தகத்தில் இடம்பெறவில்லை. டெய்லி டைம்ஸ் குறிப்பிட்டுள்ள இந்த புத்தகத்தில் தலிபான் அமைப்பின் வரலாறு, தாக்குதல்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் அவர்கள் படையின் செயல்பாடுகள் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன. பெனாசீர் பூட்டோ கொல்லப்பட்ட 10 ஆண்டுகளுக்குப் பின் இந்த உண்மையை தாலிபன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் ஆஸ்கர் தமிழன்