குருப்பெயர்ச்சி பலன்கள் 2018 இதோ

சென்னை: குரு பார்வை கோடி நன்மை. குரு பகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலனடையும். குருவின் பார்வை இந்த முறை மீனம், ரிஷபம், கடகம் ராசிகளின் மீது விழுகிறது. கடந்த ஓராண்டு காலம் சிரமத்தை சந்தித்த இந்த ராசிக்காரர்கள் இனி நன்மைகளை அடைவார்கள்.

குருபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று இடப்பெயர்ச்சி அடைகிறார். வரும் 11ஆம் தேதியன்று திருக்கணித்தப்பஞ்சாங்கப்படி இடம்பெயர்கிறார். இந்த இரண்டு நாட்களிலும் குரு பரிகார தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளாகும்.

குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. அதனால் தான் 'குரு பார்க்க கோடி நன்மை', குரு பார்வை தோஷ நிவர்த்தி' என்றெல்லாம் குருபகவானின் அருள்திறம் போற்றப் பெறுகின்றது. குரு தனது 5ஆம் பார்வையால் மீனம் ராசியை பார்க்கிறார். 7ஆம் பார்வையால் ரிஷபம் ராசியை பார்க்கிறார். 9 ஆம் பார்வையால் கடக ராசியை பார்க்கிறார். குரு பார்வையால் எந்த ராசிக்கு மாற்றம்? யாருக்கு ஏற்றம் என்று பார்க்கலாம்.

மேஷம்

குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீடு மீதும், சுக ஸ்தானமான 4ஆம் வீடு மீது, விரைய ஸ்தானமான 12வது வீடு மீதும் விழுகிறது. குரு அஷ்டம ஸ்தானமாக செவ்வாய் ஆதிக்கம் நிறைந்த விருச்சிகத்தில் அமர்ந்து தனது அருட்பார்வையால் உங்களுக்கு ஏற்றத்தை தரப்போகிறார். குடும்பம் குதூகலமாக அமையும், கணவன் மனைவி இடையே உற்சாகம் அதிகரிக்கும். பேசும் வார்த்தையில் இனிமை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். புது வீடு கட்டி குடியேறுவீர்கள். வண்டி வாகனம் வாங்கலாம். சுப விரையங்கள் அதிகம் நடைபெறும். வெளிநாடு செல்லும் யோகம் வரும். மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்லலாம்.

 

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி ஏற்றத்தை தரக்கூடியது. ராசிக்கு 7ஆம் வீட்டில் அமர்ந்து தனது ஏழாம் பார்வையால் உங்கள் ராசியை பார்க்கிறார் குருபகவான். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே உற்சாகம் அதிகரிக்கும். குருபலன் வந்து விட்டது திருமணம் கைகூடி வரும். காதல் வெற்றியடையும். 5ஆம் பார்வையால் உங்க லாப ஸ்தானத்தை பார்வையிடுவதால் செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். மூத்த சகோதரரின் அன்பு அதிகரிக்கும். பாக்கெட் நிறைய பணம் வரும். 9ஆம் பார்வையால் உங்களின் முயற்சி ஸ்தானமான 3 ஆமிடத்தை பார்வையிடுவதால் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.

 

மிதுனம்

குருபகவான் உங்கள் ராசிக்கு 6ஆம் வீடான ருண ரோக ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசிக்கு 2ஆம் வீடு, 12ஆம் வீடு 10ஆம் வீடுகளை பார்வையிடுகிறார். குடும்பத்தில் உற்சாகம் கூடும். பணவரவு அதிகரிக்கும். அதே நேரத்தில் இந்த நேரத்தில் கடன் வாங்க வேண்டாம். மறைந்திருந்த நோய்கள் வெளிப்படும். நோய்களை குணப்படுத்த பணம் வரும். வெளிநாடு செல்லும் யோகம் வரும் சுப விரையம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கலாம். வேலையில் புரமோசன் கிடைக்கும். சிலருக்கு பதவியில் மாற்றம் வரும்.

 

கடகம்

குருபகவான் உங்கள் ராசிக்கு 5 ஆம் வீடான பூர்வீக புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார். ராசிக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானம் 9ஆம் வீடான பாக்கிய ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். குரு பலன் வந்து விட்டுவிட்டது. கட்டில்கள் ஆடிய வீட்டில் தொட்டில் ஆடும் காலமும் கூடி வருகிறது. வெளியூர், வெளிநாடு பயணம் செல்லக்கூடிய நேரம் வந்து விட்டது. 11 ஆம் வீட்டை பார்வையிடுவதால் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். மூத்த சகோதரரின் உதவி கிடைக்கும்.

 

சிம்மம்

குருபகவான் உங்கள் ராசிக்கு 4ஆம் வீட்டில் அமர்கிறார் ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானம், ராசிக்கு 10ஆம் வீடான தொழில் ஸ்தானம், ராசிக்கு 8ஆம் வீடான ஆயுள் ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். இந்த பார்வை விஷேசமான பலன்களை உங்களுக்குத் தரும். சுப விரைய செலவுகள் ஏற்படும். வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்யலாம் வெற்றி கிடைக்கும். புதிய தொழில் தொடங்கலாம். பணி செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கும். 8 ஆம் வீட்டை பார்வையிடுவதால் திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் பணம் கிடைக்கும்.

 

கன்னி

கன்னி ராசிக்கு குருபகவான் உங்கள் ராசிக்கு 3ஆம் வீட்டில் அமர்கிறார். 11ஆம் வீடான லாப ஸ்தானம். 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானம், 7ஆம் இடமான களத்திர ஸ்தானத்தை பார்வையிடுகிறார். வீட்டில் கெட்டிமேளம் கொட்டும் சத்தம் கேட்கும். காதல் மலரும் காலம் இது. காதல் கணிந்து கல்யாணத்தில் முடிய வாய்ப்பு உள்ளது. 9ஆம் இடத்தை பார்வையிடுவதால் வெளிநாடு செல்லும் யோகம் வரும். செய்யும் தொழிலில் லாபம் வரும். மூத்த சகோதரரின் மூலம் நன்மைகள் நடைபெறும்.

 

துலாம்

ஜென்ம குரு இன்று முதல் குடும்ப ஸ்தானத்தில் அமர்கிறார். தன ஸ்தானம், வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்து குரு உங்கள் ராசிக்கு 6ஆம் வீடான கடன் ஸ்தானம், 8ஆம் வீடான ஆயுள் ஸ்தானம், 10ஆம் வீடான தொழில் ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுகிறது. கடந்த ஓராண்டு காலமாக நீங்கள் பட்ட கடன்கள் தீரும் காலம் வந்து விட்டது. நோய்கள் தீரும் காலமும் வந்து விட்டது. உங்கள் பேச்சிற்கு மதிப்பு அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு புரமோசனுடன் கூடிய பணிமாற்றம் கிடைக்கும். உற்சாகமான குருப்பெயர்ச்சி இதுவாகும்.

 

விருச்சிகம்

இதுநாள் வரை விரைய ஸ்தானத்தில் இருந்த குரு ஜென்ம குருவாக அமர்கிறார். உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு, 9ஆம் வீடுகளின் மீது குருவின் பார்வை விழுவது சிறப்பான அம்சமாகும். கூட்டுத் தொழில்கள் சிறப்படையும், பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் பல நடக்கும். கணவன், மனைவிக்குள் அன்பும் பாசமும் அதிகரிக்கும். அப்பாவின் மூலம் பண வருமானம் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் யோகம் வருகிறது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

 

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு ராசி நாதன் குருபகவான் லாப ஸ்தானத்தில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். குருவின் பார்வை சுக ஸ்தானமான 4ஆம் வீடு, ரோக ஸ்தானமான 6 ஆம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ஆம் வீடு மீது விழுகிறது. இந்த ராசிக்காரர்கள் ஜென்ம சனியால் கவலைப்பட்டாலும் இனி குரு பெயர்ச்சியினால் புது வீடு கட்டலாம். சுப விரைய செலவுகள் ஏற்படும். நோய்கள் தீரும், கடன்கள் தீரும் காலம் வந்து விட்டது. மாணவர்கள் உயர்கல்விக்கு முயற்சி செய்யலாம்.

 

மகரம்

மகர ராசிக்காரர்களே லாப ஸ்தானத்தில் குரு அமர்வது சிறப்பான அம்சமாகும். குருவின் பார்வை முயற்சி ஸ்தானமான 3ஆம் வீடு, பூர்வீக புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீடு, களத்திர ஸ்தானமான 7ஆம் வீடுகளின் மீது விழுகிறது. குரு பார்வையால் கெட்டிமேளச்சத்தம் கேட்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்துக்களினால் வருமானம் கிடைக்கும். செய்யும் முயற்சிகள் வெற்றியாக அமையும். இந்த குருப்பெயர்ச்சி மகரம் ராசிக்காரர்களுக்கு நன்மை தரக்கூடியதாக உள்ளது.

 

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களுக்கு 10ல் குரு அமர்வது பாதகத்தை ஏற்படுத்தாது. குருவின் பார்வை 2ஆமிடம், 4ஆம் இடம், 6 ஆம் இடங்களின் மீது விழுவது சிறப்பான அம்சம். குடும்பம் குதூகலமாக இருக்கும். உற்சாகமாக குடும்பத்தினருடன் நேரத்தை செலவு செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். புது வீடு, இடம், வாகனம் வாங்குவீர்கள். நோய்கள், கடன்கள் தீரும் காலமாகும். எதிரிகள் தொல்லை நீங்கும். எண்ணங்கள் நிறைவேறும் காலம்.

 

மீனம்

கடந்த சில ஆண்டுகாலமாகவே சிரமத்தை சந்தித்து வரும் மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி நன்மை தரக்கூடியதாக அமைந்துள்ளது. பாக்கிய குருவாக 9ஆம் இடத்தில் அமர்வது சிறப்பானது. குருவின் பார்வை ராசியின் மீது விழுகிறது. குரு பலன் வந்து விட்டது திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நிகழும். ராசிக்கு 3ஆம் இடம், 5 ஆம் இடங்களின் மீது குருவின் பார்வை படுவதால் முயற்சிகள் வெற்றியடையும், புத்திர பாக்கியம் கிடைக்கும். சொத்துக்களினால் வருமானம் உண்டு. பிள்ளைகளினால் நன்மைகள் நடைபெறும்.