தப்பான ரூட்டில் ஓடும் நாயகன்... துரத்தும் வில்லன் கும்பல்... 'பரமபத' ஜருகண்டி - விமர்சனம்!

சென்னை: பணத் தேவையை பூர்த்தி செய்ய தவறான பாதையை தேர்வு செய்யும் நாயகன், அதனால் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறான் என்பதைச் சொல்கிறது ஜருகண்டி.

கார் சீசிங் வேலை செய்யும் நாயகன் ஜெய்க்கு, சொந்தமாக டிராவல்ஸ் ஆரம்பிக்க வேண்டும் என்பது லட்சியம். வங்கியில் லோன் கிடைக்காததால், நண்பன் டேனி மூலம் அறிமுகமாகும் இளவரசுவை வைத்து தவறான பாதையில் கடன் பெறுகிறார். அந்த விஷயம் காவல்துறை அதிகாரி போஸ் வெங்கட்டுக்கு தெரியவர, ஜெய்யையும், டேனியையும் மிரட்டி பணம் பறிக்க முயல்கிறார். மீண்டும் பணத் தேவையில் சிக்கும் ஜெய், நாயகி ரெபா மோகினாவை தற்செயலாக கடத்தி பணம் கேட்டு மிரட்டுகிறார். ஆனால் அதுவே அவரை பெரும் சிக்கலில் மாட்ட வைக்கிறது. அதில் இருந்து ஜெய் எப்படி தப்பிக்கிறார் என்பதே படம் .

சின்ன சின்ன டிவிஸ்டுகள், நிறைய கலாய் காமெடி, சேசிங், அதிரடி ஆக்ஷன் என ஒரு முழுநீள கமர்சியல் படத்தை தந்திருக்கிறார், வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக பணியாற்றி, ஜருகண்டி மூலமாக இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் பிச்சுமணி. குருநாதரை போலவே ஒரு சின்ன கான்செப்ட்டை கையில் வைத்துக்கொண்டு, விறுவிறுப்பான படத்தைத் தந்திருக்கிறார்.

ஜெய்யை மாஸ் ஹீரோவாக புரோமோட் செய்ய அவரது நண்பரும் தயாரிப்பாளருமான நிதின் சத்யா முயற்சித்திருக்கிறார். ஜெய்க்கு நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருக்கின்றன. ரொம்ப ரிஸ்க் எடுக்காமல் அசால்டாக சண்டைக் காட்சிகளிலும் முகபாவனையை வைத்து மட்டுமே சமாளிக்க முயற்சித்திருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் வழக்கமான அப்பாவி தான். பகவதியில் ஆரம்பித்து ஜருகண்டி வரை ஒரே மாதிரியான டயலாக் டெலிவரி ஜெய்.

ஹீரோயின் ரெபா மோகினா தமிழ் சினிமாவுக்கு நல்ல அறிமுகம். இந்தப் படத்தில் கொடுத்த வேலையைச் சரியாக செய்திருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் எப்படி நடிக்கிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

பாஜக தமிழிசை சௌந்தரராஜன், மெர்சல் விஜய் என செம போல்ட் கலாய்கள் படத்தில் நிறைய இருக்கின்றன. டேனியும், ரோபோ சங்கரும் காமெடிக்கு நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்கள். ஓரளவுக்கு ஒர்கவுட்டும் ஆகியிருக்கிறது.

வில்லன் அமித் குமார் திவாரிக்கு ஒரேயொரு சண்டைக்காட்சி. வழக்கம் போல ஹீரோவிடம் அடிவாங்கி மடிகிறார். இளவரசு, போஸ் வெங்கட், ஜி.எம்.குமார், ஜெயக்குமார் உள்ளிட்டோரை நாம் ஏற்கனவே பல படங்களில் இதேபோன்ற கேரக்டரில் பார்த்திருக்கிறோம் என்பதால், வித்தியாசமாக, புதிதாக எதுவும் தெரியவில்லை.

போபோ ஷஷியின் பாடல்கள் கேட்கும் ரகத்தில் இருக்கின்றன. ஆனால் பின்னணி இசையில் அருமையான பங்களிப்பை தந்திருக்கிறார். மேகராமேன் ஆர்.டி.ராஜசேகர் தன்னால் முடிந்த அளவிற்கு படத்தை மெருகேற்றி இருக்கிறார். படத்தை வேகத்தை கூட்ட எடிட்டர் பிரவீன் கே.எல். இன்னும் கொஞ்சம் முயற்சித்திருக்கலாம்.

முதல் பாதியில் இருக்கும் வேகம், இரண்டாம் பாதியில் குறைந்துவிடுகிறது. ரெபா மோனிகாவின் பிளாஷ் பேக் காட்சிகளும், ஜெய் - ரெபா காதல் காட்சிகளும் படத்தின் நீளத்தை அதிகரித்து, பார்வையாளர்களின் பொறுமையை சோதிக்கின்றன. எப்போதோ முடிய வேண்டிய படத்தை நீண்டிக்கொண்ட சென்றதை தவிர்த்திருக்கலாம்.

நாயகன் ஜெய்யின் கதாபாத்திரம் புத்திசாலித்தனமாக யோசித்து பிரச்சினைகளை தீர்க்கக் கூடியதா அல்லது அதிரடியாக இறங்கி அடித்து பிரச்சினையை முடிப்பா என்பதை முடிவு செய்ய முடியாமல் இயக்குனர் நிறையவே குழம்பி இருக்கிறார்.

விடுமுறை நாட்களில் வீட்டில் போரடிக்கிறது என புலம்புபவர்கள் இந்த படத்துக்கு ஜருகண்டி... ஜருகண்டி.