எழுமின் – விமர்சனம்

நடித்தவர்கள் – விவேக், தேவயானி, அழகம் பெருமாள், பிரேம், அஜய், கவின், வினித், அர்ஜுன், சாரா, ஆதிரா மற்றும் பலர்

இசை – கணேஷ் சந்திரசேகரன் ( பாடல்கள் ) ஸ்ரீகாந்த் தேவா ( பின்னணி இசை )

ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன்

இயக்கம் – வி.பி.விஜி

வகை – ஆக்‌ஷன், நாடகம்

சென்சார் பரிந்துரை – ‘U’

கால அளவு – 1 மணி நேரம் 50 நிமிடங்கள்

சிறுவர், சிறுமிகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து விட்ட இந்த நவீன காலகட்டத்தில் அவர்களை சமூகக் குற்றவாளிகளிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள தற்காப்புக் கலை எந்தளவுக்கு அவசியம் என்பதை உணர்த்தும் படமே இந்த ‘எழுமின்’.

தொழிலதிபரான விவேக் – தேவயானி தம்பதியின் மகன் அர்ஜூன் குத்துச் சண்டையில் வல்லவர்.அதேபோல வசதியற்ற குடும்பங்களைச் சேர்ந்த அஜய், கவின், வினித், சாரா, ஆதிரா ஆகியோர் தற்காப்புக் கலையில் வல்லவர்கள். இவர்கள் எல்லோரும் தங்கள் கலையில் சிறந்தவர்களாக இருந்தாலும் பணம் கட்ட வசதியில்லாததால் அர்ஜூனைத் தவிர மற்றவர்களுக்கு பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட முடியாத சூழலில் ஏற்படுகிறது.

இதை தன் மகன் அர்ஜூன் மூலம் கேள்விப்படும் விவேக், அந்த வசதியில்லாத மாண்வர்களுக்கு தன் செலவில் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்கிறார்.

இதற்கிடையே குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெறும் விவேக்கின் மகன் அர்ஜூன் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார். மகனின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கும் விவேக் தன் மகனின் ஆசைப்படி வசதியற்ற மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க தனியாக கோச்சிங் சென்டர் ஒன்றை ஆரம்பிக்கிறார். அதில் திறமைசாலி மாணவர்கள் ஐந்து பேருக்கும் பயிற்சி கொடுக்கிறார்.

இதை கேள்விப்படும் போட்டியாளரான ஸ்போர்ட்ஸ் அகாடமியின் தலைவர் அழகம் பெருமாள் ஹைதராபாத்தில் நடக்கும் போட்டி ஒன்றில் கலந்து கொள்வதற்காக காரில் செல்லும் ஐந்து மாணவர்களையும் கடத்துகிறார். அவரிடமிருந்து மாணவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள்? தடைகளை மீறி தங்கள் விளையாட்டுத் திறமையை இந்த உலகுக்கு நிரூபித்தார்களா? என்பதே மீதிக்கதை.

புகை, மது, ஆபாசம், குத்தாட்டம், இரட்டை அர்த்த வசனங்கள் என எந்த முகம் சுழிக்கும் விஷயங்களும் வைக்காமல் ஒரு நல்ல விஷயம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற இயக்குனரின் சமூக அக்கறைக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு.

காமெடி நடிகரான விவேக் இதில் குணச்சித்திர நடிகராக அவதாரமெடுத்திருக்கிறார். மகன் மீதான அவருடைய பாசமும், அவனை இழந்த பிறகு அதை நம்ப முடியாமல் மருத்துவமனையில் அவர் தவிக்கிற தவிப்பும் விவேக்குள் இப்படி ஒரு சிறந்த குணச்சித்திர நடிகன் இருக்கிறானா? என்று ஆச்சரியப்பட வைக்கிறார். வசதியுள்ளவர்கள் வசதியற்ற குடும்பத்து குழந்தைகளின் திறமைகளை அங்கீகரிக்க வேண்டுமென்று தன் கேரக்டர் வழியாக பாடமெடுக்கிறார்.

நீண்டை இடைவெளிக்குப் பிறகு திரையில் தேவயானி. விவேக்கின் மனைவியாக, மகன் மீது மட்டுமில்லாமல் மற்ற குழந்தைகள் மீதும் பேரம்பு வைக்கும் அம்மாவாக நெகிழ்வான நடிப்பை தந்திருக்கிறார்.

விளையாட்டுகளிலும் எவ்வளவு அரசியல், அதிகார துஷ்பிரயோகம் நடந்து கொண்டிருக்கிறது என்கிற அதிர்ச்சிகரமான உண்மையை அகாடமி நடத்துபவராக வரும் கேரக்டரில் வெளிப்படுத்தியிருக்கிறார் அழகம் பெருமாள்.

போலீஸ் அதிகாரியாக வரும் பிரேம்குமார், வில்லனாக வரும் ரிஷி, கிடைக்கிற இடங்களில் காமெடி செய்யும் செல் முருகன் என படத்தில் வருகிற மற்ற கேரக்டர்களும் தங்கள் பங்கை சரியாகச் செய்திருக்கிறார்கள்.

அஜய், கவின், வினித், அர்ஜுன், சாரா, ஆதிரா என படத்தில் வருகிற ஆறு பேரும் பாக்சிங், கராத்தே, குங்பு, சிலம்பம், ஜிம்னாஸ்டிக் என பலவித போட்டிகளில் சாகசம் செய்வது இக்கால குழந்தைகளுக்கு நம்பிக்கையைத் தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

கணேஷ் சந்திரசேகரன் இசையில் பாடல்களும், ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும், கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவும் திரைக்கதையின் ஓட்டத்துக்கு ஈடு கொடுத்து விறுவிறுப்புக்கு பலம் சேர்த்திருக்கிறது

குறிப்பாக கிளைமாக்ஸில் வரும் ஆக்‌ஷன் காட்சியில் மாஸ் ஹீரோக்களையே மிரள வைத்திருக்கிறார்கள் சிறுவர்கள்.

வழக்கமான போட்டி, பயிற்சி என்கிற வழக்கமான டெம்ப்ளேட் இல்லாமல் இடைவேளைக்குப் பிறகு த்ரில்லராக திரைக்கதையை நகர்த்தியிருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனத்துக்கு எடுத்துக்காட்டு.

இன்றைய குழந்தைகளுக்கு கராத்தே, குங்பு, பாக்சிங் என எல்லா தற்காப்புக் கலைகளும் அவசியம் என்பதையும், இதுபோன்ற விளையாட்டுகளை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அவசியம் கற்றுக்கொள்ள துணை நிற்க வேண்டும் என்பதையும் இப்படம் உணர்த்துகிறது.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து கட்டாயம் பார்க்க வேண்டிய படம்!