'வாழ்றதுக்காக வேலைக்கு போறோமா... இல்ல வேலைக்கு போறதுக்காக வாழ்றோமா'... ஆண் தேவதை விமர்சனம்!

சென்னை: கார்ப்பரேட் கலாச்சாரத்தில் சிக்கிய மனைவியால் பாதிக்கப்படும் குடும்பத்தைப் பற்றிய கதை தான் ஆண் தேவதை.

மேல்தட்டு மக்களைப் போல் வாழவும் முடியாமல், கீழ்த்தட்டு மக்களைப் போல் அனுசரித்துச் செல்லவும் இயலாமல் தவிப்பது தான் பெரும்பாலும் நடுத்தர குடும்பங்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை. இதற்காக அவர்கள் கொடுக்கும் விலை அதிகமானது. இது தான் ஆண் தேவதை படத்தின் கதைக்களம்.

மெடிக்கல் ரெப் இளங்கோ (சமுத்திரக்கனி), ஐடி ஊழியர் ஜெஸ்ஸிகா (ரம்யா பாண்டியன்) தம்பதிக்கு ஆண் ஒன்று, பெண் ஒன்று என இரட்டை குழந்தைகள். கை நிறையச் சம்பளம், வீடு, கார் என ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறார் ரம்யா. இதனால் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தன் வேலையை ராஜினாமா செய்கிறார் சமுத்திரக்கனி. ஆனால், கடன் கழுத்தை நெரிக்க குடும்பத்தில் பிரச்சினை முளைக்கிறது. இதனால் மகளுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார் சமுத்திரக்கனி. ரம்யா மனம் மாறினாரா, பிரச்சினைகள் தீர்ந்ததா, மீண்டும் குடும்பம் ஒன்று சேர்ந்ததா என்பதே மீதிக்கதை.

இன்றைய பெருநகரத்து வாழ்க்கையை அப்படியே படம் பிடித்து காட்டியிருக்கிறார் இயக்குநர் தாமிரா. புலியைப் பார்த்து பூனையும் சூடு போட்டுக் கொண்டால் என்ன நடக்கும் என்பதை அழகாக விளக்கியிருக்கிறார். குடும்பத்துடன் பார்க்கும் படங்கள் குறைந்து விட்டநிலையில், இப்படி ஒரு படத்தை தந்ததற்காக நிச்சயம் தாமிராவைப் பாராட்டலாம்.

காட்சிக்கு காட்சி அட்வைஸ் மழை பொழியும் நாயகன் கதாபாத்திரம் கொஞ்சம் சலிப்பைத் தருகிறது. ஏற்கனவே முந்தைய நிறைய படங்களில் சமுத்திரக்கனியை இதே போன்ற கருத்துக் கந்தசாமி கதாபாத்திரத்தில் பார்த்திருப்பதால் இளங்கோவின் வசனங்கள் பல இடங்களில் மனதைத் தொடவில்லை. சமுத்திரக்கனி வரும் காட்சிகளில் எல்லாம், 'அய்யய்யோ இப்போ என்ன பேசப் போகிறாரோ?' என்ற பீதியே உருவாகிறது. ஆனால் இதுவும் பழைய விசயம் தான் என்றாலும், வழக்கம்போல் பொறுப்பான தந்தையாக பாராட்டுகளை அள்ளுகிறார், 'சபாஷ்'கனி.

'ஜோக்கர்' படத்துக்குப் பிறகு ரம்யா பாண்டியனுக்கு நடிக்க வாய்ப்புள்ள நல்ல கதாபாத்திரம். ஆதிராவாக வரும் பேபி மோனிகாவும், அகர முதல்வனாக வரும் மாஸ்டர் கவின் பூபதியும் ரசிக்க வைக்கிறார்கள். பிக் பாஸ் புகழ் சுஜா வருணி, எப்படியெல்லாம் ஆடம்பரமாக வாழக்கூடாது என வாழ்ந்து காட்டியிருக்கிறார். இவர்கள் தவிர ராதாரவி, காளி வெங்கட், ஹரீஷ் பெராடி, இளவரசு, அனுபமா, அறந்தாங்கி நிஷா என அனைவரும் தங்களுக்கு அளிக்கப்பட்ட வேலையைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

விஜய் மில்டனின் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் இசையும் படத்தை ஓரளவு தாங்கிப் பிடிக்கிறது. எழுத்தாளரான தாமிரா வசனங்கள் மூலம் ஆண் தேவதையை உரக்க பேச வைத்திருக்கிறார்.

குழந்தை வளர்ப்பு, பெற்றோரின் பொறுப்பு, தேவையில்லாத ஈகோ, நல்ல தொடுதல், கெட்ட தொடுதல், பணிபுரியும் இடத்தில் பாலியல் சீண்டல், கடன் தொல்லை என படத்தில் நிறைய நல்ல கருத்துகளை தேவையான அளவுக்குச் சொல்லியிருக்கிறார்கள். இதற்காக நிச்சயம் இயக்குநரைப் பாராட்டலாம்.

அதேபோல், ஒரு ஆண் வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்து குழந்தைகளை பார்த்துக்கொண்டால், அவன் எந்தளவுக்கு அவமானங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையும் படம் பிடித்து காட்டியிருக்கிறார்கள். ஆனால் அதையே காரணமாக வைத்து வரும் அந்த க்ளைமாக்ஸ் காட்சி, படத்தின் தலைப்பை சிதைத்துவிடுகிறது.

ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் வருமானத்திற்கு ஏற்ப சிக்கனமாக வாழ்ந்தால் குடும்பம் சிறக்கும் என்பதை இன்னும் அழுத்தமாகச் சொல்லி இருக்கலாம். தொலைக்காட்சி சீரியல்களே படுவிறுவிறுப்பாக மாறிவிட்ட இன்றைய சூழலில், பழைய மெகா சீரியல் பாணி திரைக்கதை அலுப்பை ஏற்படுத்திவிடுகிறது.

பெருநகர கார்ப்பரேட் கலாச்சாரப் பாதிப்பை பேசியிருக்கும் இந்த 'ஆண் தேவதை' நமக்கு அட்வைஸ் வரம் அளிக்கிறான்.