பயமா இருக்கு படத்தின் திரை விமர்சனம்

தமிழ் சினிமாவை பேய் விட்டாலும், பேய் தமிழ் சினிமாவை விடாது போல. பேய் சீசன் முடிந்துவிட்டது என்று இருந்தால் மீண்டும் ஒரு ஹாரர், காமெடி டெம்ப்ளேட்டில் ஜவஹர் இயக்கத்தில் இன்று திரைக்கு வந்துள்ள படம் தான் பயமா இருக்கு.

கதைக்களம்

படத்தின் நாயகன் சந்தோஷ் ப்ரதீப், தன் மனைவியின் அம்மாவை அழைத்து வர இலங்கை செல்கின்றார், அங்கு இரானுவ வீரர்கள் அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகின்றனர்.

இதில் மொட்டை ராஜேந்திரன், பரணி, ஜீவா, ஜெகனும் மாட்டிக்கொள்ள, இரானுவ வீரர்களிடம் சண்டைபோட்டு சந்தோஷ் அந்த 4 பேரையும் காப்பாற்றுகின்றார்.

அதன் பின் இவர்கள் 5 பேரும் நல்ல நண்பர்களாக சந்தோஷின் வீட்டிற்கு 4 பேரும் வர, அங்கு பல அமானுஷிய விஷயங்களை பார்க்கின்றனர், ஒருக்கட்டத்தில் நம்மை கூட்டி வந்த சந்தோஷே பேய் தானா என்று சந்தேகம் எழும் அளவிற்கு சில விஷயங்கள் நடக்க, இதை தொடர்ந்து யார் பேய்? இவர்கள் அனைவரும் தப்பித்தார்களா? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

நாம் முன்பே கூறியது போல் பேய் சீசனே முடிந்தும் ஒரு சில கால தாமதத்தால் இப்படம் இன்று வெளிவந்துள்ளது, ஒருவேளை படம் எடுத்த போதே வந்திருந்தால் கொஞ்சம் சுவாரசியம் கூடியிருக்கும்.

இதே கதைக்களத்தில் தமிழ் சினிமா இதுவ்ரை 100 படங்களுக்கு மேல் பார்த்திருக்கும், ஆனால், அதையும் தாண்டி இவர்கள் கதைக்காக தேர்ந்தெடுத்த லொக்கேஷன் மிகவும் கவர்கின்றது.

உண்மையாகவே இங்கு பேய் இருக்கிறது என்று சொன்னார்கள் கூட நம்பலாம் போல, அந்த அளவிற்கு பயமுறுத்துகின்றது, அதற்கு உறுதுணையாக சத்யாவின் இசையும், மகேந்திரனின் ஒளிப்பதிவும் கைக்கோர்த்து பலம் சேர்க்கின்றது.

மொட்டை ராஜேந்திரன், பரணி, ஜீவா, ஜெகன் என காமெடிக்கு 4 பேர் இருந்தாலும் ஒன் மேன் ஷோவாக கலக்குவது மொட்டை ராஜேந்திரன் தான், அதிலும் பொருட்காட்சியில் பேய் வீட்டிற்குள் செல்லும் போது சந்தோஷை கடத்த இவர்கள் செய்யும் கலாட்டா சிரிப்பு சரவெடி

இப்படி படத்தில் அங்கங்கு சிரிப்பு, பயமும் வந்தாலும், பல முறை பார்த்த கதை, காட்சி என்பதால் படம் முழுவதும் ஒன்றி பார்க்க முடியவில்லை.

க்ளாப்ஸ்

சத்யாவின் பின்னணி இசை, மகேந்திரனின் ஒளிப்பதிவு.

மொட்டை ராஜேந்திரனின் காமெடி காட்சிகள்.

பல்ப்ஸ்

பார்த்து பழகி போன பேய் ட்ராமா. ரேஷ்மி மேனன், அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு செட் ஆகவே இல்லை.

மொத்தத்தில் பயமா இருக்கு எதிர்ப்பார்த்த அளவிற்கு பயமுறுத்தவில்லை.

வாட்சப்பில் இணைய இங்கே கிளிக் செய்யவும்