தரமணி விமர்சனம்

நடிகர்கள்: ஆன்ட்ரியா, அஞ்சலி, வசந்த் ரவி, அழகம் பெருமாள், ஜேஎஸ்கே சதீஷ்குமார்

ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர்

இசை: யுவன் சங்கர் ராஜா

தயாரிப்பாளர்: ஜேஎஸ்கே சதீஷ்குமார்

எழுத்து - இயக்கம்: ராம்

தமிழ் சினிமாவுக்கென ஒரு சட்டகம், கட்டமைப்பு இருக்கிறது. ஒரு நல்ல நாயகன், கெட்ட வில்லன், அமைப்பான குடும்பம், நகைச்சுவையாளர்கள், எப்போதும் குழுவாக நாயகனுடன் சுற்றும் நண்பர்கள், காதல் சொல்லும் முறை என உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இவற்றை எப்போதோ ஒரு முறை தவிர, பெரும்பாலும் யாரும் மீறியதே இல்லை. அதுவும் வணிக சினிமாவில் மீறவே மாட்டார்கள்.

ஆனால் ராம் முற்றாக மீறியிருக்கிறார். இந்த சினிமா சட்டகத்தை உடைத்துவிட்டு, வேறு மனிதர்களை, கண்ணெதிரே தெரிந்தும் நாம் கண்டு கொள்ளாமல் போகிற மனிதர்களின் வாழ்க்கையைக் காட்டியிருக்கிறார்.

நகர்மயமாக்கள், தொழில்மயமாக்கல், தகவல் தொழில்நுட்பப் புரட்சி என்ற பெயரில் அழிக்கப்பட்ட சென்னையின் புற நகர் இயற்கை, பறவைகளின் வாழிடங்கள், கிரிக்கெட்டில் தோற்றால் கூட எல்லைக் கடலில் சுடப்படும் தமிழ் மீனவர்கள், ஏழைகளை மட்டுமே பாதித்த பண ஒழிப்பு, செல்போன் குற்றங்கள், கார்ப்பரேட் தலைமைகளின் வக்கிரங்கள்... இவற்றைப் பற்றின தன் பார்வையைப் போகிற போக்கில், தன் குரலில் ராம் பதிவு செய்திருக்கும் விதம், இந்த 'ஃபேஸ்புக் தலைமுறை' ஸ்டைல். திரையரங்குகள் அதிர்கின்றன.

காதல் என்ற பிடிக்குள் வந்துவிட்ட பிறகு ஒரு ஆண் மீது பெண் அல்லது பெண் மீது ஆண் காட்டும் அதீத பிடிப்பு (Possessiveness) ஒரு கட்டத்தில் சந்தேகமாக மாறும். அதன்பிறகு அந்த உறவு நரகமாகத் தெரியும். பிரிந்து ஒழிந்தால் போதும் என்றாகிவிடும். அப்படி ஒரு காதல் இணையின் வாழ்க்கையின் ஒரு பகுதி இந்தப் படம். கதையாகச் சொல்ல ஒன்றுமில்லை.

ஆன்ட்ரியா திரை வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த சிறந்த வேடம் இந்த ஆல்தியா. ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண். கணவனைப் பிரிந்து ஒற்றைக் குழந்தையுடன் வாழ்க்கையைக் கடக்க முயற்சிக்கும் பாத்திரம். மிக இயல்பாக, கச்சிதமான உடல் மொழியுடன் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

சில காட்சிகள்தான் என்றாலும் அஞ்சலியின் பாத்திரம் மனதுக்குள்ளேயே நிற்கிறது.

புதுமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நடித்திருக்கிறார் வசந்த் ரவி. யோசித்துப் பார்த்தால் இந்த மாதிரி பிரபுநாத்களை எங்கேயோ பார்த்திருப்பதாகத் தோன்றும்.

அழகம் பெருமாள் நடிப்பும் அவரது குமரி மொழிநடையும் ரசிக்க வைக்கின்றன.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ்குமார், ஒரு நடிகராகவும் இதில் அறிமுகமாகியுள்ளார். போலீஸ் அதிகாரி வேடம். மிகச் சரியாகச் செய்திருக்கிறார்.

இந்தப் படத்தின் பெரும் பலம் யுவனின் அருமையான இசை, பாடல்கள். பின்னணி இசை அத்தனை புதிதாக உள்ளது. இசையிலும் எள்ளலைக் காட்ட முடியும் என்று நிரூபித்திருக்கிறார் யுவன். நா முத்துக்குமார் எழுதிய எல்லாப் பாடல்களுமே அருமை. குறிப்பாக அந்த 'பாவங்களைப் போக்கி...' பாடல். சமீப காலத்தில் படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து போட்டுக் கேட்ட முதல் பாடல் இதுதான். யாரோ உச்சிக்கிளை மேலே, ஒரு கோப்பை, உன் பதில் வேண்டி... பாடல்களைக் கேட்கக் கேட்க... எப்பேர்ப்பட்ட மகா கவிஞனை இழந்துவிட்டோம்!

அடுத்து தேனி ஈஸ்வரின் பரவசப்படுத்தும் ஒளிப்பதிவு. தரமணியின் உள்ளார்ந்த அந்த பெரும் நீர்ப்பரப்பு, அடுத்த சில நிமிடங்களில் ஒரு பெருமழை, டால்பின்கள் துள்ளும் அந்த பெருங்கடல் பரப்பு, பகாசுர கட்டங்கள்... பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

பண ஒழிப்பு இந்த மக்களை எந்த அளவுக்கு அவலமான வாழ்க்கையை விட்டுச் சென்றிருக்கிறது என்பதற்கு ராம் வைத்திருக்கும் காட்சியை, தியேட்டரில் மக்களுடன் கட்டாயம் பிரதமர் பார்க்க வேண்டும். ஒவ்வொரு பிரச்சினையிலும் இந்த மக்கள் எப்படி ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற ராமின் ஆதங்கம் மக்களைச் சரியாகப் போய்ச் சேர்ந்துவிட்டது என்பதை, இந்தக் காட்சி முடிந்ததும் மக்கள் 'சூப்பர்... லவ்யூ ராம்' என்று கத்தும்போது புரிந்து கொள்ள முடிந்தது. எள்ளலும் துள்ளலுமாக வசனங்கள்.

சில காட்சிகளில் மிகைப்படுத்தல் இருக்கிறதோ என்ற கேள்வியும் உண்டு. ஐடியில் பணியாற்றும் இளம் மனைவியை, பப்பில் அடுத்தவனோடு ஆடவிட்டுப் பார்ப்பதுதான் பிடிக்கும் எனும் கிழட்டுக் கணவன் பாத்திரம். அப்புறம் அந்த கெட்ட வார்த்தைகள். நிஜத்தில் அவற்றைக் கடந்துதான் வருகிறோம் என்றாலும், திரை ஊடகத்தில் அவற்றுக்கு ஒரு இடம் தரும்போது வளரிளம் சிறுவர்களிடம் கவனம் பெற்றுவிடுகிறது (ஏ சான்று படம் என்றாலும் எப்படியும் இன்றைய சிறுவர்களுக்கு பார்க்கக் கிடைத்துவிடுகின்றன). ராம் போன்றவர்கள் நிச்சயம் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

ஆனால் நிச்சயம் தரமணி.. தமிழ் சினிமாவில் ஒரு புது மலர்ச்சி.

வாட்சப்பில் இணைய இங்கே கிளிக் செய்யவும்