தல 59ல இல்ல.. இந்த 'சர்ச்சை' படம் மூலம் தமிழுக்கு வருகிறார் மயிலு மகள்?

சென்னை: மீண்டும் படமாக்கப்படும் வர்மா படத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அவரை தன்னைப் போலவே தமிழிலும் முன்னணி நடிகையாக்க வேண்டும் என்பது ஸ்ரீதேவியின் கனவாக இருந்தது. ஆனால், ஜான்வியின் முதல் படம் ரிலீசாவதற்கு முன்பே அவர் மரணமடைந்து விட்டார்.

இந்நிலையில், போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் பிங்க் பட தமிழ் ரீமேக்கில் ஜான்வி கௌரவத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியானது. அஜித் ராசி மூலம் ஜான்வி தமிழில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஜான்வி அப்படம் மூலம் அல்ல, வர்மா படம் மூலம் தமிழில் அறிமுகமாவதாக தற்போது ஒரு செய்தி உலா வருகிறது. வர்மா படம் மூலம் விக்ரம் மகன் த்ருவ் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். பாலாவை வைத்து எடுக்கப்பட்ட அர்ஜுன்ரெட்டியின் ரீமேக்கான வர்மா, திருப்தியாக இல்லை என்பதால் மீண்டும் வெறொரு இயக்குநரை வைத்து படமாக்கப்பட இருக்கிறது.

இப்புதிய படத்தில் த்ருவ் இருப்பதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவரைத் தவிர மற்ற நடிகர், நடிகைகள் அப்படியே இந்த புதிய படத்தில் இருக்கிறார்களா, இல்லை மாற்றப் படுகிறார்களா எனத் தெரியவில்லை. பாலா இயக்கிய வர்மாவில் மேகா சௌத்ரி நாயகியாக நடித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் தான் த்ருவ்விற்கு ஜோடியாக ஜான்வி தமிழில் அறிமுகமாவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து தயாரிப்பு தரப்போ, போனிகபூர் தரப்போ இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.