விஸ்வாசம் வெற்றி பின் சிவா விடம் அஜித் கூறியது இது தான்

சிவா இயக்கத்தில் அஜித் புதிய படத்தில் விரைவில் நடிப்பார் என தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை: சிவா இயக்கத்தில் மீண்டும் புதிய படமொன்றில் அஜித் நடிப்பார் , அதனை நாங்களே தயாரிப்போம் என சத்யஜோதி தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம். பொங்கலையொட்டி நேற்று ரிலீசான இப்படத்திற்கு மக்களிடையே நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது. வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், விஸ்வாசம் வெற்றி குறித்து சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் நம்மிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

 

பாசிடிவ் விமர்சனம்:

விஸ்வாசம் படத்திற்கு நல்ல பாசிடிவ்வான விமர்சனங்கள் கிடைத்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படமும் இதயம், கிழக்கு வாசல் படங்கள் மாதிரி மக்களிடையே அதிகம் பேசப்படும். இப்படத்தின் முதல் காப்பியைப் பார்த்த போதே எனக்கு அந்த நம்பிக்கை வந்துவிட்டது.

அஜித் மகிழ்ச்சி:

அஜித் மிகவும் எளிமையான மனிதர். இப்படத்திற்கு மக்களிடையே நல்ல விமர்சனம் கிடைத்திருப்பது குறித்து அஜித்திடம் சொன்னேன். மிகவும் சந்தோசப்பட்ட அவர், 'எல்லாமே கடவுள் செயல்' எனக் கூறினார். இவ்வளவு பெரிய நடிகராக இருந்தும்கூட கதாபாத்திரத்திற்காக மிகவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார்.

பேட்ட பயம்:

பேட்ட படத்துடன் விஸ்வாசத்தை ரிலீஸ் செய்ய ஒரு தயாரிப்பாளராக எனக்கு பயம் இருந்தது. பொங்கலுக்கு விஸ்வாசம் படத்தை ரிலீஸ் செய்வதென கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே அறிவித்து, அதற்காக தயாரிப்பாளர் சங்கத்திடமும் அனுமதி பெற்றிருந்தோம். ஆனால் திடீரென பேட்ட படமும் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது.

விளக்கம்:

இது குறித்து சன் டிவி நிர்வாகத்திடமும் பேசினேன். ஆனால் அப்போது அவர்கள் தரப்பு விளக்கத்தை அவர்கள் எடுத்துக் கூறினர். ஒரு தயாரிப்பாளராக அதனை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

நம்பிக்கை:

அஜித் மீதும், படத்தின் மீதும் இருந்த நம்பிக்கையினால் துணிந்து பேட்ட படத்துடன் விஸ்வாசத்தை ரிலீஸ் செய்தோம். நாங்கள் எதிர்பார்த்தது போலவே நல்ல பாசிடிவ்வான ரிசல்ட் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தனுஷுடன் 2 படங்கள்:

விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து தனுஷை ஹீரோவாக வைத்து இரண்டு படங்கள் தயாரிக்கிறோம். ஒரு படத்தை துரை செந்திலும், மற்றொரு படத்தை ராம்குமாரும் இயக்குகின்றனர். அடுத்த ஓராண்டிற்கு இந்த இரண்டு படங்கள் மீது தான் கவனம் செலுத்துகிறோம்.

மீண்டும் வெற்றிக்கூட்டணி:

அதற்கு அடுத்தபடியாக நிச்சயம் சிவா இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்கும் புதிய படத்தை நாங்கள் தயாரிப்போம். இந்த வெற்றிக் கூட்டணி நிச்சயம் மீண்டும் இணையும் என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன்.