முதல்வரிடம் போகிறது கத்தி பிளாஷ்பேக் விவகாரம்.. முருகதாஸுக்கு புது சிக்கல்?

கத்தி படத்தின் பிளாஷ்பேக் என்னுடையது என அன்பு ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

சென்னை: கத்தி படத்தின் பிளாஷ் பேக் கதை என்னுடையது.. அது பத்தி புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என இயக்குனர் அன்பு ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

கத்தி படத்தில் என்னுடைய கதையை பயன்படுத்திக் கொண்டு முருகதாஸ் தன்னை கழட்டிவிட்டதாக இயக்குனர் அன்பு ராஜசேகர் கடந்த 4 தினங்களுக்கு முன்பு பகிரங்க புகார் ஒன்றை கூறினார்.

உண்ணாவிரதம்

அதனால் ஏ.ஆர். முருகதாசுக்கு எதிராக தஞ்சை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக போராடி கொண்டிருப்பதாகவும், தனக்கு நியாயம் கிடைக்கும் வரை சர்கார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும்கூறி வள்ளுவர் கோட்டத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் இருந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

செய்தியாளர்கள் சந்திப்பு

தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் அன்பு ராஜசேகர் உடல்நல குறைபாடு காரணமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது:

தாக்கபூமி - குறும்படம்

2012ல் தாக்கபூமி என்ற குறும்படத்தை எடுத்து இருந்தேன், உதவி இயக்குனர் வேண்டும் என்று முருகதாஸ் கேட்டு இருந்த போது என்னுடைய குறும்படத்தை அனுப்பி இருந்தேன்,அந்த கதை களத்தை வைத்து முருகதாஸ் திரைப்படமாக எடுத்து விட்டார்.

எந்த நடவடிக்கையும் இல்லை

கத்தி படத்தின் பிளாஷ் பேக் கதை என்னுடையது என்று மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தேன். மேலும் முருகதாஸ் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நேரில் சந்திக்க போகிறேன்

இது தொடார்பாக தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலிடம் புகார் அளித்து இருந்தேன். இன்று நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் என்னை அழைத்து பேசுவதாக கூறி உள்ளார்.

முதல்வரை நம்பித்தான் உள்ளேன்

இது தொடர்பாக முதல்வரிடம் சந்தித்து பேச வாய்ப்பு கேட்டு இருக்கிறேன். தமிழக முதல்வரை சந்திக்க அனுமதி தர வேண்டும். நியாயத்தின் அடிப்படையில் ஆதாரத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறுதியில் நான் முதலமைச்சரை நம்பித்தான் இருக்கிறேன்

முருகதாஸ் மீது புகார்

இவ்வாறு இயக்குனர் அன்பு ராஜசேகர் தெரிவித்துள்ளார். சர்க்கார் பட பிரச்சனை தலைதூக்கி உள்ள இந்த நேரத்தில் முருகதாஸ் மீது கத்தி பட விவகாரமும் சேர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது