விஜய் வார்த்தைக்காக அமைதி காக்கிறோம்.. எங்களுக்கும் அது தெரியும்.. ரசிகர்கள் ஆவேசம்

சென்னை: தங்களை அமைதி காக்கும்படி விஜய் கூறியிருப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்கார் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்துக்கு எதிராக ஆளும் அதிமுகவினர் போர்க்கொடி உயர்த்தி இருக்கின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சர்கார் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளை முற்றுகையிட்ட அதிமுகவினர், விஜய் ரசிகர்கள் வைத்த பேனர்களை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், அனுமதியின்றி பேனர் வைத்ததாக பலர் மீது வழக்கு பாய்ந்திருக்கிறது.

இந்நிலையில் அதிமுகவின் நடவடிக்கை குறித்து நம்மிடம் பேசிய, நடிகர் விஜய்யின் ரசிகர் மன்ற இளைஞரணி காஞ்சி மாவட்ட பொறுப்பாளர் ஈ.சி.ஆர்.சரவணன், ஆளும் கட்சியின் செயல்பாடுகள் தங்களை கடுமையாக பாதித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து நம்மிடம் அவர் கூறியதாவது,

"அதிமுகவினரின் செயல் எங்களை கடுமையாக பாதித்துள்ளது. நாங்கள் கஷ்டப்பட்டு வைத்த பேனரை அவர்கள் எப்படி கிழிக்கலாம்.

அரசாளும் ஒரு கட்சி இப்படி வன்முறையை கையில் எடுக்கலாமா?. இவர்கள் தரப்பில் நியாயம் இருப்பதாக வைத்துக்கொண்டாலும், முறையாக சட்டப்படித்தானே பிரச்சினையை அணுகியிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு இப்படி வன்முறையில் இறங்குவது என்ன நியாயம்.

எங்களுக்கு இவர்களை போல் செய்ய தெரியும்.. ஆனால் எங்களை அமைதி காக்கும்படி தளபதி விஜய் சொல்லியிருக்கிறார். அவர் எங்களை இப்படி தான் நல்ல முறையில் வழி நடத்துகிறார். பேனர்களை அகற்றும்படி தலைமை ரசிகர் மன்றத்திடம் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி நாங்களே பேனர்களை அகற்றி வருகிறோம்.

அதிமுகவின் இந்த செயலால் மக்களுக்கு அவர்கள் மீது அதிருப்தி மேலும் அதிகரித்திருக்கிறது. இது அவர்களுக்கு நல்லதல்ல", என சரவணன் தெரிவித்தார்.