கமலுடன் கை கோர்க்கிறார் விஜய்? தமிழக அரசியலில் காத்திருக்கும் புயல்!

 

சென்னை: நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் விஜய் ஆகியோர் இணைந்து ஓரணியில் அரசியலில் களமிறங்க வாய்ப்புள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

தலைவா திரைப்படத்திலிருந்தே, நடிகர் விஜய் தொடர்ந்து, ஆட்சியாளர்களால் பந்தாடப்பட்டு வருகிறார். இப்போது சர்கார் வரை அது எதிரொலிக்கிறது.

சும்மா ஒன்றும், பந்தாடப்படவில்லை, விஜய்க்கு இருக்கும் அரசியல் ஆசையை அவரது அடுத்தடுத்த படங்கள் பிரதிபலிப்பதாலேதான் இந்த நிலை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அடுத்த எம்ஜிஆர்

அப்படியானால் அரசியல் ஆசை இருப்பது தவறா? எம்ஜிஆர் தொடங்கி பல பிரபலங்கள் அரசியல் ஆசையை திரையில் புகுத்தியவர்கள்தானே! ஆம்.. அங்குதான் பிரச்சினை. சந்தித்த முதல் தேர்தலில் இருந்து, கடைசி தேர்தல் வரை ஆட்சியில் இருந்த எம்ஜிஆர் போன்ற இன்னொருவர் உருவாவதை எந்த அரசியல் கட்சிதான் விரும்பும்? எம்ஜிஆராக விஜய் உருவாக முடியுமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும் என்றாலும், உருவாகும் அளவுக்கு ரசிகர் பலம் அவருக்கு உள்ளது என்று ஆட்சியாளர்கள் நம்புகிறார்கள். எனவேதான், விஜய் எம்ஜியாராக முடியாது என்று அவர்களே, மைண்ட் வாய்ஸ் என நினைத்து சத்தமாக அடிக்கடி ஸ்டேட்மென்ட் விடுகிறார்கள்.

அரசியல் ஆசை

விஜய் அரசியலுக்கு வரும் ஆசையை வெளிப்படுத்திதான் சமீபகாலமாக பேசி வருகிறார். சர்கார் இசை வெளியீட்டு விழா பேச்சு அதில் சேர்ந்ததுதான். பழ.கருப்பையாவும் கூட விஜய் அரசியலுக்கு வர ஆசைப்படுவதாகத்தான் கூறியுள்ளார். இதை கேட்டு கண்டிப்பாக அவரது ரசிகர்களைவிட தந்தை எஸ்ஏசிதான் ரொம்ப ஹேப்பியாகியிருப்பார். அவர்தானே, விஜய்க்கு அரசியல் ஆசையை விதை போல ஊன்றி வளர்த்து வருபவர்.

விஜய்தான் பிரச்சினை?

இந்த நிலையில்தான், சர்கார் திரைப்படத்திற்கு ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அவர்களுக்கு படம் மட்டும் பிரச்சினையில்லை, விஜய்தான் முக்கிய பிரச்சினை என்பதை சேலத்தில் இன்று நடந்த ஆர்ப்பாட்டம் கோடிட்டு காட்டிவிட்டது. மறு தணிக்கை செய்யப்பட்டாலும், சர்கார் திரையிடப்பட கூடாது என்று கோஷமிட்டனர் அதிமுக தொண்டர்கள். இது ஒரு சாம்பிள்தான். இனிமேல் விஜய் காதல் படங்களே நடித்தாலும் இப்படித்தான் எதிர்ப்போம் என்று கூறும் எச்சரிக்கை தொனிதான் அது.

முதல் குரல் கமலுடையது

இந்த நிலையில்தான், கமல்ஹாசன் இந்த சீனுக்குள் என்ட்ரி ஆகிறார். மெர்சல் திரைப்படம் வெளியானபோது விஜய் சந்தித்த பிரச்சினைகளுக்கு முதல் நபராக ஆதரவு குரல் கொடுத்த கமல், சர்காருக்கும் அதை செய்ய தவறவில்லை. அவரது கண்டன ட்வீட்டுக்கு பிறகுதான், விஷால், ரஜினிகாந்த் மற்றும் பல பிரபலங்களும் அரசை கண்டித்து ட்வீட்டோ கருத்தோ கூற ஆரம்பித்தனர். கமல்ஹாசன் கொள்கையும், விஜய் முன் வைத்து வரும் கொள்கையும் ஏறத்தாழ ஒன்றுதான்.

வேட்பாளர் தேர்வு அணுகுமுறை

சர்கார் படத்தில் கூட வேட்பாளர்களை தேர்வு செய்ய விஜய் காட்டும் அணுகுமுறையைத்தான் கமல்ஹாசன் தனது மக்கள் நீதிமன்றத்தில் ஏற்கனவே செய்து வருகிறார். நேர்மையான வேட்பாளர்கள் அதுவும் கூட கடும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட வேட்பாளர்களைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற ம.நீ.ம கட்சி கொள்கைதான், சர்கார் காட்சிகளிலும் எதிரொலித்தது.

கூட்டணிக்கு வாய்ப்பில்லை

காங்கிரசுடன் கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலை சந்திக்க திட்டமிட்ட கமலுக்கு பாசிட்டிவ் சிக்னலை காங். மேலிடம் தரவில்லை. திமுகவுடன் கூட்டணியில் தொடருவதையே ராகுல் காந்தி விரும்புகிறார். 20 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் கமல் கட்சி தனித்து போட்டியிட ரெடியாகிவிட்டது. லோக்சபா தேர்தலும் இதே நிலை நீடிக்கும். மற்ற கட்சிகளைவிட தங்கள் கட்சி தனித்துவமானது, ஊழலுக்கு எதிரானது என்பதால், எளிதாக யாரும் கூட்டணி வைக்க மாட்டார்கள் என கமல்ஹாசனே பேட்டியொன்றில் குறிப்பிட்டது இங்கு கவனிக்கத் தக்கது.

கமலுக்கு வாய்ஸ்

எனவே, வரும் லோக்சபா தேர்தலுக்குள் அரசியலில் குதிக்க விஜய் முடிவெடுத்தால், அவர் கமல்ஹாசன் கட்சியுடன் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது. அதற்குள்ளாக கட்சியை ரெடி செய்ய முடியாது என்பதால் அட்லீஸ்ட் கமலுக்கு ஆதரவாக 'வாய்ஸ்' கொடுக்கவாவது வாய்ப்புள்ளது என்கிறார்கள். இருவர் கொள்கையும் ஒரே மாதிரியானது என்பதோடு, ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டிய கால கட்டத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டுவிட்டனர் என்பதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. சம காலத்தில், பட ரிலீசின்போது அதிக பிரச்சினைகளை சந்தித்தவர்கள் கமல்ஹாசனும், விஜய்யும்தான் என்பது கவனிக்கத்தக்கது