சர்கார் படத்தில் இவ்வளவு நுணுக்கமான காட்சியும், விஷயமும் இருக்கா? தெரியாதவங்க இதை படிங்க...

சர்க்கார் சத்தமில்லாமல் மாற்று சினிமாவின் மாயைகளை அடித்து நொறுக்கி , அதை உலகளாவிய அளவில் கொண்டாட்டமாய் பெரும் பொருட்செலவில் எடுத்துச் செல்கிறது. மாற்று சினிமா பாவனைகளையும் , கமர்ஷியல் சினிமாவின் கூறுகளையும் , கமர்ஷியல் சினிமாவின் ஃபார்மேட்டிலேயே கிண்டல் அடித்து , ஒரு தரமான மாற்று சினிமாவை கமர்ஷியல் சினிமா ஃபார்மேட்டில் வைத்து ரசிகர்களையும் , அறிவு ஜீவிகளையும் பார்த்து கொக்கரித்து சிரிக்கிறது.

மாற்று சினிமாவின் நாயகன் என்பவன் , அடி மட்டத்தில் இருந்துகொண்டு ஏழ்மையை பிரதானமாக காட்டிக்கொண்டு , அழுக்கு உடைகளோடும் , மூக்குச் சளியோடும் இருப்பான். இதில் நாயகன் 1800 கோடி சம்பாதித்துக்கொண்டு ப்ளே பாயாக இருக்கிறான்.இவனும் அடி மட்டத்தில் இருந்து வந்தவன் தான். 2000 ரூபாயை வைத்துக்கொண்டு இரண்டு வருடங்கள் உணவு உண்டவன் தான். ஆனாலும் நகரத்தின் மேன் மக்கள் கூடி இருக்கும் சபையில் எல்லோர் முன்னிலையிலும் கால் மேல் கால் போட்டுக்கொண்டு சிகரட் பிடிக்கிறான்.

கோடிக்கணக்கில் பணம் கொடுத்து லாயரை கூட்டி வந்தும் , தானே வாதம் செய்கிறான் கோர்ட்டில். என்ன தான் தானே வாதம் செய்தாலும் , புரையோடிப் போய் இருக்கும் சமூகத்தில் , அவரவர்க்கு உரிய பணத்தை கொடுத்தால் மட்டுமே , தான் பேசவே அனுமதி கிடைக்கும் என்பதை ஒரு ஏழை பணக்காரன் மூலம் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

 

 

வழக்கமாக அமெரிக்க தொழிலதிபர் என்றால் , அய்யரைத்தான் இதுவரை திரைப்படங்களில் காட்டி இருப்பார்கள். அது மாற்று சினிமாவாக இருந்தாலும் சரி , மடை மாற்று சினிமாவாக இருந்தாலும் சரி. அமெரிக்க மாப்பிளை என்றாலே கூட அய்யர்தான். அதுவும் ஒன்றும் தெரியாத பேக்குகள் என்ற அளவிலேதான் இதுவரை திரைப்படங்களில் காட்டப்பட்டு வந்திருக்கிறது. இதில் தான் முதன்முறையாக ஒரு மீனவன் , அமெரிக்க கம்பனியின் சீஈஓ ! 1800 கோடி வருடம் சம்பாதிக்கும் ஆள். இதை வட சென்னையில் வரும் , "நீ ஒரு ஆள் தான் படிச்சவன் இருக்க" என்று தனுஷ் ஒரு மீனவரிடம் கூறும் காட்சியோடு வைத்துப் பார்த்து புரிந்து கொண்டால் , இந்தக் காட்சியின் அடர்த்தியும் யதார்த்தமும் புரியும்.

தமிழ் நாட்டில் நிகழும் மூடப் பழக்கங்களில் ஒன்று , இறுதி ஊர்வலம் மற்றும் கருமாதி. ஏழை எளிய மக்களுக்கு பெரும் சுமை இது. செத்துப் போன பின்பும் செலவு பிடித்து ,கடனாளி ஆக்கி அவர்களின் வாழ்வை கலைத்துப்போடும் . இந்தப் படத்தில் விஜய் அவர்களின் தந்தை கேரக்டர் தன்னை கடலில் போட்டு விடச் சொல்கிறது. அதுவும் அது சாகும் முன்பே இப்படி சொல்லி விட்டு சாகிறது.அதன் வார்த்தைகளை அதன் மூலம் சொல்லாமல் அதன் மகனான விஜய் மூலம் நமக்குக் கட்த்துகிறார் இயக்குநர்.

 

 

அந்த சாவு செலவுகளை தவிர்ப்பதன் மூலம் ஒரு குடும்பம் இரண்டு வருடங்கள் உணவு உண்ண முடியும் என்ற புரட்சிகரமான சமூகக் கருத்தை இதைப்போன்ற பிற்போக்கு சமூகத்தின் முன் கூற பெரும் துணிவு வேண்டும். இந்தக் காட்சியை நீங்கள் பரியேரும் பெருமாள் படத்தில் , கருப்பிக்கு கூட பாடை கட்டி , பாட்டுப்பாடி , பெரும் பொருட் செலவில் மயானத்துக்கு எடுத்துச் செல்லும் காட்சியோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும். கேவலம் ஒரு நாயின் மரணத்துக்கு , பாட்டு போட்ட வகையில் , சந்தோஷ் நாராயணனின் சம்பளம் மட்டும் எவ்வளவு என்று யோசித்துப் பார்த்தீர்களானால் இந்த உண்மை புரியும்.

1800 கோடி ரூபாய் சம்பாதிக்கும் விஜய் , எலகபஷன் ஆஃபீஸ் போட இடம் வேண்டும் என்று கேட்கிறார். அவர் நினைத்தால் , ஒரு பெரிய ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸையே விலைக்கு வாங்கி அலுவலகம் போட முடியும். ஆனால் அந்த ஏழை மக்களின் குடியிருப்புகளை காலி செய்து விட்டு அலுவலகம் போடுகிறார். அவரது நோக்கம் அலுவலகம் போடுவது மட்டுமல்ல , இந்த சாக்கிலாவது அந்த குடியிருப்புகளை சுத்தப் படுத்தி , பெயிண்ட் அடித்துத் தருவதுதான். ஒரு தேர்தல் அலுவலகம் போடுவதில் கூட ஒரு சமூக நோக்கு இருக்க வேண்டும். ஒரு சமூக நோக்கின் மேல்தான் இன்னொரு சமூக நோக்கே கட்டமைக்கப்படும். இதுதான் உண்மையான நவீன சமூக குவாண்டம் அரசியல்.

இதில் இன்னொரு நுணுக்கமான காட்சியும் உண்டு. வீடு காலி செய்யும் போது , கேஸ் சிலிண்டரை, ப்ளாஸ்டிக் டாய்லெட் வாளியை தூக்குவது போல அசால்டாக தூக்கி ஊஞ்சலாட்டிக்கொண்டே செல்வார் விஜய். இதில் இரண்டு அரசியல் பகடிகளை குதத்தால் சிரித்தபடி கடத்துகிறார் இயக்குநர். ஒன்று , ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும் சிலிண்டரின் விலை , இன்னொன்று , எடை குறைத்து கொடு[ப்பதால் சிலிண்டரின் வெயிட் டாய்லெட் வாளி ரேஞ்சிக்கு ஆகிவிடுகிறது என்பது. ஒரு நவீன அரசியல் சமூக மாற்று சினிமாவில் இப்படி ஆழ் நுணுக்கமாக காட்சிகளை வைப்பதன் மூலம் , ஆளும் வர்க்கத்தையும் கிண்டல் செய்ய முடிகிறது , அதே சமயத்தில் தமிழகத்தில் பரவி கிடக்கும் ஹீரோ பில்ட் அப்பையும் அந்த ஹீரோவை வைத்தே கிண்டல் செய்ய முடிகிறது.

 

 

இன்னொரு முக்கியமான அம்சத்தை படம் அழகாக ஆராய்கிறது. கெட்ட செயல்கள் என்பது வேறு , கெட்ட செயல்களை செய்பவன் வேறு. கள்ள ஓட்டு போடுவது கெட்ட செயல் , கள்ள ஓட்டு போட்டவன் யோகி பாபு. கள்ள ஓட்டு போடுவதைத்தான் விஜய் எதிர்க்கிறாரே ஒழிய , கள்ள ஓட்டு போட்டவனை அல்ல. இதுதான் தமிழ் சினிமாவின் ஆக பெரும் பாய்ச்சல். இதுவரை தமிழ் சினிமா ஹீரோக்கள் , ஒரு கொலை நடந்தால் , கற்பழிப்பு நடந்தால் , கொலையையோ , கற்பழிப்பையோ எதிர்க்காமல், கொலை செய்தவனையும் , கற்பழித்தவனையும் எதிர்த்து கொல்வார்கள். இதில் விஜய் அவனை நண்பனாக்கிக் கொள்கிறார். அவனுடன் குடிக்கிறார், கூத்தாடுகிறார்.

ஒரு எளிய விளிம்பு நிலையில் இருக்கும் இவனைப்போன்ற ஆட்கள் இருக்கும் வரையில் தான் கள்ள ஓட்டு , கொலை , போன்ற தீய செயல்கள் அரங்கேறும். அதை நல்லவனான ஹீரோ எதிர்க்க முடியும். இவனைப்போன்ற அப்பாவி ஆட்கள் இல்லையென்றால் நல்ல விஷயங்களையே மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது. ஆனால் இவனை இயக்குபவர்கள் வேறு. இயக்குபவர்களுக்கு இதைப்போன்ற எளிய ஆட்கள் வேண்டும் . அதே போல நல்ல ஹீரோவுக்கும் இவனைப்போன்ற ஆட்கள் வேண்டும். நன்மைக்கும் தீமைக்குமான போராட்டத்தில் நடுவில் நியூட்ரலாக , கேட்டலிஸ்டுகளாக இருப்பவர்களே இதைப்போன்ற அடியாட்கள் என்று படம் ஆழமாக சுட்டுகிறது.

 

 

முகத்தில் செருப்பால் அடிப்பது போல் இன்னொரு அற்புதமான தருணம் படத்தில் இருக்கிறது. என்னதான் நீ ஐ ஐ டி யில் படித்தாலும் , புழுக்கமான நகரத்தில் இருந்தாலும் , சட்டைக்கு மேல இன்னொரு டி ஷர்ட்டை போட்டுகிட்டு அமெரிக்க சீஈஓ கீழதான் நீ அடிமையா வேலை செய்யணும் என்ற உண்மையை அப்பட்டமாக எடுத்து வைக்கிறார் இயக்குநர்.

இந்தியன் எம்பசிக்கு போன் போடு என்ற காட்சியில் , இந்தியாவிலேயே , இந்தியாவுக்கு ஒரு தூதரகம் வேன்டியிருக்கிறது என்பதையும் ,இந்தியர்கள் இந்தியாவிலேயே அந்நிய தேசத்தவர்கள் போலத்தான் நடத்தப்படுகிறார்கள் என்ற கூர்மையான மாய யதார்த்தவாத காட்சியும் உண்டு. அதே போல என் ஆர் ஐக்கு ஆதார் கார்டு இல்லையென்று அரசு அறிவித்தாலும் எல்லா என் ஆர் ஐயும் ஆதார் கார்ட் வச்சிருக்கான், அதை அரசு கேட்டு வாங்கியும் கொள்கிறது என்ற அரசின் சிகப்பு நாடாத்தனத்தை கலர் கரகபஷன் இல்லாமலேயே காட்டியிருக்கிறார்.

கமர்ஷியல் படமோ , மாற்று சினிமாவோ , கதைக்கு தேவையே இல்லையென்றாலும் எப்படி ஹீரோயின் உள்ளே நுழைக்கப் படுகிறார் என்பதை இப்படத்தில் , ஹீரோயினைத் தாண்டி , ஹீரோயின் அப்பாவையும் மெனக்கெட்டு உள்நுழைத்து அபத்த காமடியில் வெளுத்து வாங்கியிருக்கிறார் இயக்குநர்.

 

 

சண்டை , அடிதடி என்றால் ரத்தம் பயம் என்று காலங்காலமாக சினிமா காட்டிக்கொண்டு இருக்கிறது. மாற்று சினிமா இன்னும் கொடூரமாக வன்முறையாக இந்தக் காட்சிகளை அணுகும். அப்படி எல்லாம் இல்லாமல் , சண்டை என்றால் ஒன்றுமேயில்லை , அது ஒரு கவிதை போல , அது ஒரு செலிபிரேஷன் போல , அது ஒரு கேளிக்கை போல என சண்டைக் காட்சிகளை ரோஜா மலர் மேல் பட்டுத் தெறிக்கும் பனித்துளி போல , ஒரு அழகான கவிதை போல , ஒரு அதிகாலை காஃபி போல , ஒரு திருட்டு முத்தம் போல ,அவ்வளவு ஃபீல் குட்டாக படம் ஆக்கியிருக்கிறார் இயக்குநர்.

மேலை நாடுகளுக்கும் கீழை நாடுகளுக்கும் உள்ள தொழிலாளர்களின் சம்பள வித்தியாசங்களை இந்தப் படம் போல இவ்வளவு பட்டவர்த்தனமாய் எந்தப் படமும் சொன்னதில்லை. படம் முழுக்க கூட்டம் கூட்டமாய் தமிழ் நடிகர்கள் லட்சக் கணக்கில் இருக்க , நான்கே நான்கு வெளிநாட்டு நடிகர்களை , மெனக்கெட்டு ஒரு சீன் வைத்து வெளிநாட்டுக்கே திருப்பி அனுப்பி விடுகிறார் இயக்குநர். படம் முழுக்க இருந்தால் செலவு கட்டுப்படி ஆகாது, அவர்கள் சம்பளம் அப்படி என்பதை போட்டு உடைத்து விடுகிறார்.

 

 

இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது , இந்த மாற்று சினிமா இயக்குநர்களுக்கு இருக்கும் திமிர், செருக்கு. என்னமோ தாங்கள் மட்டுமே கலைஞர்கள் போலவும் , தங்களுக்கு மட்டுமே கிரியேட்டிவிட்டு உள்ளது போலவும் காட்டிக்கொண்டு இருப்பார்கள். திரையிலும் கலை நுணுக்கங்கள் வெளிப்படும்படி சீன் போடுவார்கள். ஆனால் இந்தப் பட இயக்குநரோ , ஒரு படம் எடுக்க மேல் தட்டு மனோபாவ கிரியேட்டி விட்டு ஏதும் வேண்டாம் , உயர்குடி மக்களுக்கான கலையும் வேண்டாம், ஏழை மக்களுடையதான உழைப்பு இருந்தால் போதும் என்ற நிலைப்பாட்டில் , கிரியேட்டிவிட்டி , கலை , நுணுக்கம் என்ற மேட்டுக்குடி பம்மாத்துகள் ஏதுமின்றி வெறும் உழைப்பை நம்பி படம் எடுத்து இருக்கிறார். தன் உழைப்போ , அடுத்தவர் உழைப்போ அதைப்பற்றி கவலைப்படாத இயக்குநர் உழைப்பின் பக்கம் நின்றிருக்கிறார்.

படம் முழுக்க லசக்கணக்கான மனிதர்கள் ,படும் நெடுக கடும் உழைப்பு . ஒரு துணை நகரம் அமைக்க எவ்வளவு ஆட்கள் தேவைப்படுவார்களோ , அவ்வளவு ஆட்கள் , எவ்வளவு உழைப்புத் தேவைபப்டுமோ அவ்வளவு உழைப்பு. இவ்வளவு ஆட்களையும் கட்டி மேய்த்து , தானும் உழைத்து , ஒரு சிறந்த மேஸ்த்திரி போல , வெறும் உழைப்பால் மலர்ந்த இந்த மக்களுக்கான நவீன மாற்று சினிமாவை நம் பார்வைக்கு வைக்கிறார் இயக்குநர்.