சர்கார் படம் வன்முறையை தூண்டுகிறதாம்.. ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்

சென்னை : சர்கார் பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மீது தேச துரோக சட்டப்பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் சர்கார் படத்தில் தேவையற்ற காட்சிகள் இருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ, அன்பழகன் உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர். ஜெயலலிதா இருந்த போது இப்படி ஒரு படத்தை எடுத்திருக்க வேண்டியது தானே என்று அமைச்சர் ஜெயக்குமாரும் கேட்டிருந்தார்.

ஓட்டுரிமை அவசியத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்று சொல்லப்பட்ட போதிலும் இதில் முழுக்க முழுக்க அரசியலே இருக்கிறது. சிஸ்டம் சரியில்லை என்று அரசுத் துறை அதிகாரிகளின் செயல்பாடுகளைப் பற்றியும், அரசு வழங்கும் இலவச திட்டங்கள் பற்றியும் இதில் பேசப்பட்டுள்ளது. படத்தில் ஒரு சீனில் ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இலவச பொருட்களை எரிப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளதே அதிமுகவினரின் எதிர்ப்புக்கு காரணமாக அமைந்துவிட்டது.

தொடர் சர்ச்சைகள் 
தொடரும் சர்ச்சைகள்

சர்கார் கதையில் தொடங்கிய சர்ச்சை இப்போது காட்சிகள், கதாபாத்திரங்களின் பெயர்கள் என்று அடுத்தடுத்து புதுசு புதுசாக கிளம்பி வருகிறது. வியாபார நோக்கத்திற்காக பரப்பப்படும் விளம்பரமே தவிர வேறு எதுவும் இல்லை என்று சிலர் கூறுகின்றனர்.

 

போலீசில் புகார் 
கமிஷனரிடம் புகார்

இந்நிலையில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸிற்கு எதிராக சென்னை செம்பியத்தை சேர்ந்த தேவராஜன் என்ற சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஏழை எளியோருக்கு பயன்படும் வகையில் இலவச பொருட்களை அறிமுகம் செய்தார்கள். அதன் பயனாக தங்களின் ஆட்சி காலத்தில் ஒவ்வொரு பொருட்களாக வழங்கினார்கள்.

 

சட்டம் ஒழுங்கு சீர்கேடு 
சட்டம் ஒழுங்குக்கு ஆபத்து

சர்கார் படத்தில் இலவசப் பொருட்களை தீயிட்டு கொளுத்தும் காட்சிகள் அரசை இழிவுபடுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்டது. ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் சீர்குலைக்கும் விதமாக முருகதாஸ் படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார். இவரால் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்படும்.

 

வன்முறையை தூண்டுகிறது 
தேசத்துரோக பிரிவில் நடவடிக்கை

மாநில அரசுக்கு எதிராக வன்முறையை தூண்டும் ஏ.ஆர். முருகதாஸை தேசத்துரோகியாக கருத வேண்டும். ஏ.ஆர். முருகதாஸின் செயல் இலவச பொருட்களை பெற்ற மக்களின் மனதையும் பாதித்துள்ளது. எனவே அவர் மீது இந்திய குற்றவியல் சட்டம் (தேசத்துரோக சட்டப்பிரிவு) 124 -ஏவின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்வதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.