'சர்கார்' காட்சி ரத்து! ஏமாற்றத்தில் திரும்பிய ரசிகர்கள்!

ராஜன் செல்லப்பா தலைமையில் மதுரை சினிப்ரியா காம்ப்ளக்ஸுக்குள் புகுந்த அ.தி.மு.க.வினர் 'சர்கார்' திரைப்படம் திரையிட கூடாது என போராட்டத்தில் குதித்தனர்.

இதனால் இன்று மதியம் 2 மணிக்கு திரையிடப்படுவதாக இருந்த 'சர்கார்' திரைப்படம் நிறுத்தப்பட்டதாக . சினிப்பிரிய, மினிப்ரியா, மற்றும் சுகப்ரியா திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

 

 

மேலும் இன்று 2 மணி காட்சிக்கு டிக்கெட் முன்பதிவு செய்திருந்த ரசிகர்கள் திரைப்படத்தை பார்க்காமலேயே திரும்பி சென்றனர். மேலும் 2 மணி காட்சி நிறுத்தப்பட்டாலும் 4 : 30 காட்சி திரையிடப்படும் என திரையரங்க நிர்வாக உறுதியளித்துள்ளது.

எனினும், சர்கார் படத்தின் காட்சிகள் ரத்து செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல், நிர்வாகத்தினரிடம் சில ரசிகர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் சிறு சலசலப்பு ஏற்பட்டது.

 

 

மேலும் காட்சிகள் நிறுத்தப்படுவதை திரையரங்க மேலாளரை சந்தித்து உறுதி செய்தபின் நிருபர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா,'' புரட்சித்தலைவி அம்மா அவர்களையும், அவரது இலவசத்திட்டங்களையும் எள்ளி நகையாடி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கேள்விப்பட்டுக் கொந்தளிப்பில் உள்ளோம். நாங்கள் இன்னும் படம் பார்க்கவில்லை.

படத்தில் அம்மா தொடர்பான காட்சிகளையும் வசனங்களையும் உடனே நீக்காவிட்டால் இப்போது மதுரையில் நடந்தது போல் தமிழகம் முழுக்க போராட்டம் நடத்தப்பட்டு படம் முடக்கப்படும். தமிழக அரசு கொடுத்த இலவசங்களை எரித்து மக்களிடம் வன்முறையைத் தூண்டும் இப்படத்தை மதுரையில் ஒரு தியேட்டரில் கூட அனுமதிக்கமாட்டோம். தக்க போலீஸ் பாதுகாப்புடன் அ.தி.மு.க. தொண்டர்கள் மதுரையில் மற்ற பகுதிகளில்'சர்கார்' ஓடும் தியேட்டர்களுக்கு விரைந்து கொண்டிருக்கிறார்கள்' என்றார்.