குளிர்விட்டு போச்சு.. சர்கார் திரைப்பட குழு மீது நடவடிக்கை.. சீறும் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: வீரமாமுனிவரின் 338வது பிறந்தநாள், தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்ட, அவரது திருஉருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர், மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதன்பிறகு அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ் உலகம் மட்டுமல்ல, உலகம் உள்ளவரை வீரமாமுனிவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும். தமிழுக்கு வீரம் முக்கியம். வீரமாமுனிவர், தனது பெயரில் சமஸ்கிருதம் கலக்க கூடாது என்று நினைத்தவர் என்றார்.

இதையடுத்து நிருபர்கள் சர்கார் விவகாரம் குறித்து கருத்து கேட்டனர். அப்போது ஜெயக்குமார் கூறியது இதுதான்:

தைரியம் 
குளிர் விட்டுப்போச்சு

திரைப்படம் எடுப்பவர்கள், குறிப்பாக நடிகர்களுக்கு இப்போ ஒரு ஃபேஷன் உள்ளது.'அம்மா' இல்லாமல் ரொம்ப குளிர் விட்டுப்போச்சு. 'அம்மா' இருக்கும்போது இப்படி ஏதாவது ஒரு படத்தில் கருத்து வந்ததா?, 'அம்மா' இருக்கும்போது இப்படி படம் எடுத்திருந்தால் இவர்கள் வீரத்தை மெய்ச்சியிருப்போம். ஆனால் இப்போது, கோழைகளை போல திரைப்படங்களில் காட்டுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் முதல்வராக ஆசை இருக்கும். அதற்காக முதல்வர் போல திரைப்படத்தில் வேடமிடுவார்கள். ஆனால் அதை ஏற்பார்களா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

[சர்கார் படத்திற்கு ஆளும் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்க, இந்த காட்சிகள்தான் காரணம்? ]

 

உணர்வுகள் 
பிறர் உணர்வுகள்

தனது கொள்கைகளை சொல்லி, லட்சியங்களை சொல்லி, பிரதிபலிப்பதாக படம் இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக பிறர் உணர்வுகளை மிதித்து, எல்லா தமிழ் மக்கள் உணர்வுகளை அழித்து செய்யப்படும் செயலை யாரும் ஏற்க முடியாது. அமைச்சர் சி.வி.சண்முகம் சொல்லியதை போல, திரைப்படம் என்பது மக்களுக்கு நல்ல விஷயங்களை சொல்வதாக இருக்க வேண்டும்.

 

சட்ட நடவடிக்கை 
ஒரே எம்ஜிஆர்

அந்த அடிப்படையில்தான் எம்ஜிஆர் படங்கள் இருந்தன. அவர் படங்கள் மீது எந்த காலத்திலாவது விமர்சனங்கள் வந்ததா? உலகம் உள்ளவரை எல்லோராலும் போற்றப்பட கூடியவர் எம்ஜிஆர். இவர்கள் புரட்சி தலைவர் போல வந்துவிட முடியும் என நினைக்கிறார்கள். ஆனால் ஒரே எம்ஜிஆர்தான். இவர்கள் தலைகீழாக நின்றாலும், அழுது புரண்டாலும், தலைவரை போன்ற அங்கீகாரத்தை மக்கள் கொடுக்க மாட்டார்கள். மற்றவர்கள் உணர்வுகளை நீங்கள் புண்படுத்தாதீர்கள். பிறர் மனதை புண்படுத்தும் வகையில் இருந்தால் திரைப்பட குழு மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜெ. பெயர் 
ஜெயலலிதா பெயர்

ஜெயலலிதாவிற்கு ஒருவர் வைத்த பெயரை படத்தில் பயன்படுத்தியுள்ளது சரியில்லை. அதில் உள்நோக்கம் உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஏற்கிறார்களா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். அது 2019ம் தேர்தலில் எதிரொலிக்கும். சரியானதா இல்லையா என்பதை 6 மாதங்களில் மக்களே சொல்வார்களே. அதிமுகவும், அமமுகவும் இணைவது என்பது, கனவில்தான் நடக்கும். நிஜத்தில் நடக்காது.