இனி, ரஜினிகாந்த்தை மன்றத்தை விட்டு நீக்குவது மட்டும்தான் பாக்கி!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற நிர்வாகிகள் மீண்டும் மாற்றப்பட்டுள்ளனர். ரசிகர் மன்ற நிர்வாகிகளை நியமிப்பதில் ரஜினிகாந்த் தொடர்ச்சியாக தடுமாற்றத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

அரசியல் கட்சி துவங்கப்போவதாக கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில், அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். ஓராண்டு ஆகப்போகும் நிலையில், இதுவரை பெரிய அளவில் எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை.

ரசிகர் மன்றங்களை பலப்படுத்த வேண்டும் என்பதில் மட்டும் ரஜினிகாந்த் தீவிரம் காட்டி வருகிறாராம்.

ஆரம்பம் 
தடுமாற்றம் ஆரம்பம்

ஆனால் அங்கும் ஒரு சிக்கல். ரசிகர் மன்ற நிர்வாகிகளை கையாளுவதில் ரஜினிகாந்த் தடுமாறி வருகிறார். ரஜினி மக்கள் மன்றத்திற்கான மாநில செயலாளராக பதவி வகிக்கும் ராஜு மகாலிங்கம் நீக்கப்பட்டதாக கடந்த ஜூலையில் ஒரு செய்தி தீயாக பரவியது. இதை தலைமை மறுத்தது. இருப்பினும்,
ராஜு மகாலிங்கம், மற்றொரு நிர்வாகி சுதாகர் ஆகியோரை ஓரம் கட்டி விட்டு, இளவரசன் என்பவரை பொறுப்புக்கு கொண்டு வந்திருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

நிர்வாகி 
புதிய நிர்வாகி

இளவரசனை வைத்துதான், மன்ற கூட்டங்களை ரஜினிகாந்த் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவித்தன. அவரும், மக்கள் மன்றத்தில் கட்டுக்கோப்புடன் இல்லாதவர்களை கடுமையாக கண்டித்து வருவதாக கூறப்பட்டது. இதனால் ரஜினிக்கு அடுத்தடுத்து புகார்கள் பறந்தன. நீண்ட கால ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ரஜினி மக்கள் மன்றத் தலைமை நிலைய நிர்வாகியாக இருந்துவரும் டாக்டர் இளவரசன் மீது, சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் பலர் குற்றம்சாட்டி பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தனர்.

 

ஏன் மாற்றம் 
பதவிகள் நீக்கம்

இதற்கு காரணம், சில அதிரடி பதவி நீக்கங்கள்தானாம். ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக இருந்த நமசிவாயம் மீது போலீசில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவரை நீக்கிவிட்டு, பாபு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் பாபு மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது தெரிந்ததும், இளவரசன் டீம், இவரை சென்னைக்கு அழைத்து கண்டித்தனராம். பூத் கமிட்டி வேலைகளை முடிக்க உத்தரவிட்டனராம். ஆனால் அவர் பெரிதாக அதை காதில் போடவில்லையாம். இந்த நிலையில், ரஜினி மன்ற விதிகளை மீறி போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு 20 பேருடன் சென்ற பாபு, ஊடகங்களில் இளவரசன் குறித்து குற்றம்சாட்டி விட்டு ராஜினாமா செய்துள்ளார்.

 

புகார்கள் 
ஏதாவது ஒரு புகார்

இதேபோல தேனி மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக இளைஞர் அணிச் செயலாளராக இருந்த கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார். மகளிரணியினர் கொடுத்த புகாரையடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம். புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளராக இருந்த சங்கர் மாற்றப்பட்டு மாநில செயலாளராக இருந்த பிரபாகர், அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் இப்படி தொடர் மாற்றங்கள் நடக்கின்றன. இப்படியே மாற்றிக்கொண்டிருந்தால் ரஜினிகாந்த் பதவியாவது தப்புமா, அல்லது அவரையும் மாற்றுவார்களா என்று பொறுமுகிறார்கள், பதவி நீக்கப்பட்டவர்கள்.