மறைந்த ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றி வைக்கும் அஜித்

சென்னை: விஸ்வாசம் படத்தை அடுத்து அஜித் வினோத் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என்று தொடர்ந்து சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித். தற்போது விஸ்வாசம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஸ்வாசம் படத்தோடு சிவாவை விட்டுவிட்டு வேறு யாராவது இயக்குனருடன் நடிங்க தல என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் அஜித் தீரன் அதிகாரம் ஒன்று புகழ் வினோத் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்குமாம். கடந்த சில மாதங்களில் அஜித்தும், வினோத்தும் இரண்டு முறை சந்தித்து பேசியுள்ளனர். இருப்பினும் படம் குறித்த ஒப்பந்தத்தில் இன்னும் அஜித் கையெழுத்திடவில்லை.

அஜித், வினோத் இணைந்து பணியாற்றும் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளாராம்.

ஸ்ரீதேவியின் இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் அஜித் கவுரவத் தோற்றத்தில் வந்தார். அந்த படத்தில் நடிக்கும்போதே நாம் சேர்ந்து தமிழில் படம் பண்ண வேண்டும் என்று ஸ்ரீதேவி அஜித்திடம் கூறினாராம்.

படம் பண்ணுவதற்குள் ஸ்ரீதேவி இறந்துவிட்டார். அவரின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க போனி கபூர் தயாரிப்பில் நடிக்கிறாராம் அஜித்.

இது தொடர்பாக அஜித் போனி கபூருக்கு போன் செய்து பேசியுள்ளாராம்.