பெண்ணாக மாறும் முன்னணி மலையாள நடிகர்

திருவனந்தபுரம் : படத்துக்கு படம் வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பது என்றால் மலையாள திரையுலகை பொறுத்தவரை மோகன்லால், திலீப் ஆகியோருக்கு அடுத்ததாக நடிகர் ஜெயசூர்யா முன்னிலை வகிக்கிறார் என்று சொல்லலாம்.

தற்போது தனது ஆஸ்தான இயக்குனரான ரஞ்சித் சங்கரின் டைரக்ஷனில் 'ஞான் மேரிக்குட்டி' என்கிற படத்தில் நடித்து வருகிறார் ஜெயசூர்யா. இந்தப்படத்தில் ஆணாக இருந்து பெண்ணாக மாறும் கேரக்டரில் ஜெயசூர்யா நடிக்கிறார் என முன்பே தகவல் வெளியானது.

தற்போது வெளியாகியுள்ள இந்தப்படத்தின் டீசர் அதை உண்மை என உறுதிப்படுத்தியுள்ளது. 'ஞான் மேரிக்குட்டி' படத்தின் டீசரில் தாடி வைத்துள்ள சூர்யா கண்ணாடியில் முகம் பார்க்கும்போது தன்னை பெண்ணாக உணர்வது போல வெளியாகியுள்ள இந்த டீசர் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மலையாள சினிமாவில் புதிய இயக்குநர்கள் கலக்கி வரும் சூழலில், மற்ற மொழி ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்று வருகிறது மலையாளப் படங்கள். இந்தப் படமும் மொழி கடந்து வரவேற்பைப் பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.