ஷூட்டிங் போக பணமில்லை தள்ளாடும் மெர்சல் படத் தயாரிப்பாளர்

விஜய் நடித்த படங்களிலேயே வசூல் சாதனை படைத்த படம் என்கிற பெருமையைப் பெற்றது ‘மெர்சல்’ திரைப்படம்.

அட்லி இயக்கிய இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் இராம நாராயணின் மகனான முரளி ராமசாமி தயாரித்திருந்தார். உலகம் முழுவதும் சுமார் 250 கோடி ரூபாயை இப்படம் வசூல் செய்தது.

அவ்வளவு பெரிய தொகையை வசூல் செய்தும், தயாரிப்பாளருக்கு நயா பைசா கூட லாபம் வரவில்லை என்பது தான் அதிர்ச்சியான தகவல்.

இதனால் மெர்சல் வசூலித்த 250 கோடி ரூபாய் பணத்தில் தனக்கும் பங்கு வரும் என்று நம்பி அடுத்தடுத்து படங்களை தொடங்கிய அந்த நிறுவனம் தற்போது படப்பிடிப்புக்குச் செல்லக் கூட பணமில்லாமல் எல்லா படங்களையும் நிறுத்தி விட்டதாக கோடம்பாகத்தில் சொல்லப்படுகிறது.

ஏன் மெர்சலால் தயாரிப்பாளருக்கு லாபமில்லை?

‘மெர்சல்’ படத்துக்கு முன்பு இதே நிறுவனம் ‘பாம்பு சட்டை’, ‘காஸ்மோரா’, ‘காற்று வெளியிடை’ என பல படங்களை வாங்கி விநியோகம் செய்தார்கள். மேற்கண்ட படங்களால் விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்திருக்கிறார்கள்.

அந்த நஷ்டத்தை படத்தை வாங்கியவர்களும், திரையிட்டவர்களும் கேட்ட போது ‘மெர்சல்’ படத்தில் வரும் லாபத்தில் தந்து விடுகிறேன் என்று அவர்களுக்கு உத்திரவாதம் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர்.

அதன்படி ‘மெர்சல்’ படத்தில் வந்த லாபத்தை தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் பிரித்துக் கொண்டு விட்டு உங்களுக்கு பணமே இல்லை என்று கையை விரித்திருக்கிறார்கள்.

இதனால் மெர்சல் பட வசூலில் தனக்கும் பணம் வரும் என்கிற நம்பிக்கையில் சுந்தர் சி டைரக்‌ஷனில் ‘சங்கமித்ரா’, இயக்குநர் சசி – ஜிவி பிரகாஷ் – சித்தார்த் கூட்டணியில் தயாராகவிருந்த ரெட்டைக்கொம்பு, சந்தானம் – எம்.ராஜேஷ் கூட்டணி படம், தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் படம் என ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் அடுத்தடுத்து தயாரிக்கவிருந்த அத்தனை படங்களுமே ட்ராப் ஆகிவிட்டதாக கோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

இடையில் ஜெயம் ரவி நடிப்பில் தயாராகியிருக்கும் ‘டிக் டிக் டிக்’ படத்தை வாங்கி விநியோகம் செய்ய முடிவு செய்திருந்தது இந்த நிறுவனம். ஆனால் தற்போது அந்த முடிவிலிருந்தும் அந்த நிறுவனம் பின் வாங்கி விட்டது.

குறைந்த பட்ஜெட்டில் படமெடுத்து கோடிகளில் லாபம் பார்ப்பது தான் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் வழக்கம். அதனால் தான் குறுகிய காலத்திலேயே காணாமல் போன பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்தியில் அந்த நிறுவனம் 100 படங்களுக்கும் மேல் தயாரிக்க முடிந்தது. அதனால் மீண்டும் தங்களுடைய பழைய பாணியிலேயே பட்ஜெட்டில் படங்களை எடுக்கலாமா? என்று யோசித்து வருகிறது அந்நிறுவனம்.