விசுவாசத்துக்கு மட்டும் விதிவிலக்கு எதுக்கு தயாரிப்பாளரிடம் எகிறிய அஜித்

சென்னை: ஒட்டுமொத்த திரையுலகமும் ஸ்ட்ரைக்கில் இருக்கும்போது விசுவாசம் படத்துக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு கேட்கிறீர்கள் என தன் பட தயாரிப்பாளரையே கடிந்துள்ளார் அஜித்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாக குழு அறிவித்த மார்ச் 1 முதல் புதிய படங்கள் வெளியீடு இல்லை. மார்ச் 16 முதல் அனைத்து திரைப்பட துறை சார்ந்த படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் அனைத்தையும் நிறுத்தப்படுகிறது.

இந்த இரண்டு முடிவுகள் பற்றி விளக்கம் கூறவும், உறுப்பினர்கள் கருத்தை கேட்கவும் நேற்று முன்தினம் மாலையில் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது தயாரிப்பாளர்கள் சங்கம்.

கூட்டத்தில் தற்போதைய சங்க தலைவர் விஷால் தவிர்த்து முன்னாள் தலைவர்கள் சத்யஜோதி தியாகராஜன், எஸ்ஏ சந்திரசேகர், கலைப்புலி தாணு மற்றும் மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தியாகராஜன், எடிட்டர் மோகன் தவிர்த்து கூட்டத்தில் பங்கேற்ற 160 உறுப்பினர்களும் என்ன இழப்பு வந்தாலும் திட்டமிட்டபடி வேலை நிறுத்தத்தை நடத்துங்கள் என்று ஒன்றுபட்டு குரல் எழுப்பினார்கள்

அஜித் குமார் நடிக்கவுள்ள 'விசுவாசம்' படத்திற்கான அரங்குகள் அமைக்கப்பட்டுவிட்டன. சூட்டிங் தொடங்க வில்லை என்றால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும் என அப்படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன்முறையிட்டதுடன் படப்பிடிப்பு நடத்தவும் சிறப்பு அனுமதி கேட்டார்.

தயாரிப்பாளர்கள் நலனுக்காக எடுக்கப்பட்டுள்ள வேலை நிறுத்த முடிவில் பெரியவர் சிறியவர் என்ற பாகுபாடு கூடாது,

போராட்டத்தின் போது சில இழப்புகள் வரத்தான் செய்யும் என பெரும்பான்மையான உறுப்பினர்கள் குரல் கொடுக்க, கடைசியில் தியாகராஜனும், எடிட்டர் மோகனும் சங்க முடிவுக்கு கட்டுப்படுவதாக உறுதியளித்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றி அறிந்த அஜித்குமார், 'அனைவரது நலனுக்கான போராட்டத்தில் நமது நலன் மட்டும் பார்ப்பது நியாயம் அல்ல. சங்கத்தின் முன்னாள் தலைவரான நீங்கள் முடிவை அமல் படுத்த முழுமையாக ஒத்துழைக்க வேண்டாமா...

அதை விடுத்து விசுவாசம் படத்திற்கு மட்டும் படப்பிடிப்பு நடத்தசிறப்பு அனுமதி கேட்டது சரியில்ல சார்... விடுங்க.. எல்லாம் சரியானதுமே நாம் படப்பிடிப்புக்குப் போகலாம்,' என்று சத்யஜோதி தியாகராஜனிடம் சற்றே கடுமையான சொல்லிவிட்டாராம் அஜித்.

எத்தனையோ தயாரிப்பாளர்கள் தன் கால்ஷீட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்க, விவேகம் படம் சரியாகப் போகாததால், அந்தப் படத்தைத் தயாரித்த அதே தியாகராஜனுக்கு மீண்டும் படம் நடித்துக் கொடுக்கிறார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.