அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் வினோத்: ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்

அஜித் நடிக்கும் அடுத்த படத்தை ‘சதுரங்க வேட்டை’ வினோத் இயக்குகிறார். இந்தப் படத்தை, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விசுவாசம்’ படத்தில் நடிக்க இருக்கிறார். அஜித் -சிவா தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்திருக்கும் இந்தப் படத்தில், நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தை, சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு என 3 பேர் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடிக்க இந்தப் படத்தில் கமிட்டாகியுள்ளனர்.

‘விசுவாசம்’ படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. ‘சதுரங்க வேட்டை’ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கியவர் வினோத். அரவிந்த் சாமி, த்ரிஷா நடித்துள்ள ‘சதுரங்க வேட்டை 2’ படத்தின் கதையையும் இவர்தான் எழுதியிருக்கிறார்.

அஜித் – வினோத் இணையும் இந்தப் படத்தை, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஸ்ரீதேவிக்கும், அஜித்துக்கும் இடையில் நல்ல நட்பு இருந்தது. அதனால்தான் ஸ்ரீதேவி கேட்டுக் கொண்டதற்காக ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்தார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.