மாமிசம் போல என்னை வியாபாரம் செய்ய பார்த்தார்கள் பகீர் கிளப்பிய அமலா பால்

மலேசியாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை அமலா பாலிடம் தொழிலதிபர் ஒருவர் தவறாக நடந்துக்கொள்வதாகவும், அவர் தொடர்ந்து அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அமலா பால் நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.

இதையடுத்து அழகேசன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மலேசியாவில் உள்ள தனது நண்பருடன் பார்ட்டியில் பங்கேற்குமாறு அமலா பாலை கேட்பதற்காகவே, அவரை தொடர்பு கொண்டதாக கூறினார்.

அமலா பாலியின் இத்தகைய தைரியமான நடவடிக்கைக்கும், அவரது புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல் துறைக்கும் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் பாராட்டு தெரிவித்திருந்தார்.

விஷாலின் பாராட்டுக்கு தற்போது நன்றி தெரிவித்துள்ள அமலா பால், தன்னை மாமிச துண்டைப் போல வியாபாரம் செய்ய பலர் காத்திருந்ததாக கூறியுள்ளார்.

பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் பல நடிகைகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததை, நடிகைகள் பலர் தைரியமாக வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தி வருகிறார்கள். ஏஞ்சலினா ஜோலி உள்ளிட்ட பல நடிகைகள் இந்த தயாரிப்பாளரால் பாதிக்கப்பட்டிருப்பதை வெளிப்படையாக கூறி வருவது போல, இதுபோல பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் தங்களது கருத்தை பதிவிடுவதற்காக, ”மீ டூ) (#MeToo) என்ற ஹேஷ்டேக்கை பிரபல ஹாலிவுட் நடிகை அலிசா மிலானோ தொடங்கி வைத்தார். இதையடுத்து ஏராளமான நடிகைகள் அதில் தங்களது பாலியல் பாதிப்புகளை தெரியப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை அமலா பாலும் இந்த ஹேஷ்டேக்கில் தனது பாலியல் பாதிப்பு குறித்து பதிவிட்டுள்ளார். அதில், “என் பின்னால் நின்றதற்கும் எனக்கு ஆதரவு அளித்ததற்கும் நன்றி. பாலியல் தொல்லைக் கொடுப்பவர்களுக்கு எதிராக ஒன்று சேர்வது ஒவ்வொரு பெண்ணுக்குமான கடமை. அந்த நபர் என்னை மாமிசத் துண்டு போன்று வியாபாரம் செய்யப் பார்த்தார். அவரின் துணிச்சல் எனக்கு எரிச்சலை தந்தது.” என்று தெரிவித்துள்ளார்.