டைரக்டரின் சுதந்திரத்தில் தலையிட்டாரா விக்ரம்

ஸ்கெட்ச் ’ விக்ரமுக்கு வெற்றியா, தோல்வியா? இந்தக் கேள்வி பொதுவான சினிமா ரசிகர்களுக்கு இருந்திருக்கலாம். க்ளியர் பண்ணிட்டாப் போச்சு என்று சக்சஸ் மீட் வைத்தது ஸ்கெட்ச் படக்குழு!

‘இருமுகன்’ படத்தை தயாரிப்பதாக இருந்தார் தாணு. என்ன நினைத்தாரோ விக்ரம்? டைரக்டரை அப்படியே நைசாக தள்ளிக் கொண்டு போய் ஷிபுதமீம் என்ற வேறொரு தயாரிப்பாளரிடம் கோர்த்துவிட்டு விட்டார். இப்படி சொல்லாமல் கொள்ளாமல் வஞ்சித்த விக்ரம் மீது வருத்தத்தில் இருந்த தாணு, இருமுகன் வெற்றியை கூட பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. (இதுபோல பல பல டுமாங்கிகளை கடந்தவராச்சே?)

ஆனால் காலம், தாணுவின் கையில் கொண்டு வந்து ஸ்கெட்சை சேர்த்தது. இவரது அண்ணன் மகன்தான் படத்தின் தயாரிப்பாளர். படத்தை நல்ல முறையில் வெளியிட்ட தாணு, நேற்று தனது அன்பை பகிர்ந்து கொண்டார். ‘என் கண்கள் பனிக்கிற அளவுக்கு இப்படம் வெற்றியை கொடுத்துவிட்டது. நான் விக்ரமை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்’ என்றது தாணுவின் பெருந்தன்மை.

படத்தில் சூரியும் இருந்தார். அவரது போர்ஷன்கள் பெருமளவில் இல்லை. ஆனால் தனது பேச்சில் அதற்கு தனி விளக்கம் கொடுத்தார் விக்ரம். “இந்தப்படத்தில் சூரியின் போர்ஷன்கள் நிறைய குறைக்கப்பட்டதற்கு நான்தான் காரணம். படத்தின் வேகத்திற்கு அது இடையூறாக இருந்ததால் அப்படி சொல்ல வேண்டியதாகிவிட்டது. அதற்காக சூரியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வேணும்னா சூரி ஹீரோவா நடிக்கிற படத்தில் நானும் நடிக்கிறேன். இல்லேன்னா நானும் அவரும் டபுள் ஹீரோவா நடிக்கிறோம்” என்றார் மனப்பூர்வமாக.

ஒரு பேச்சுக்கு இப்படி சொன்னாலும், இந்த விழாவில் தனது தவறை ஒப்புக் கொள்கிற அளவுக்கு பெரிய மனுஷனா இருக்காரே என்று வியந்தது பிரஸ். அதே நேரத்தில், எடிட்டிங்கின் போது ‘இதை நறுக்கு. அதை தூக்கு’ என்று சொல்கிற உரிமை டைரக்டருக்கு மட்டும்தான் உண்டு. அதில் ஏன் விக்ரம் தலையிட்டார்? அப்படின்னா விக்ரம் நடிக்கும் எல்லா படத்திலேயும் இப்படிதான் நடக்குமா? என்றெல்லாம் பேசி கலைந்தார்கள்.

ஆமா… நானாதான் உளறிட்டேனா? (விக்ரம் வாய்ஸ்)

மீண்டும் 1 கோடி சம்பளம் பெறும் ராஜமௌலியின் அப்பா