கமல், விஷால்... இப்ப விஜய் சேதுபதி... விரைவில்!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் அவதாரம் எடுக்க உள்ளார்.

சேனல்களுக்கு இடையில் நிலவும் கடுமையான போட்டி, டீஆர்பி ரேட்டிங் தேவை போன்ற காரணங்களால், திரைத்துறையில் இருக்கும் முன்னனி நடிகர்களை அழைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்துவதில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் நாட்டம் காட்டுகின்றன.

சூர்யா, கமல், விஷால், பிரசன்னா, வரலட்சுமி, ஸ்ருதிஹாசன் என திரை நட்சத்திரங்கள் நிகழ்ச்சிகளை தொகுத்துவழங்கும் நிலையில், தற்போது அந்த வரிசையில் நடிகர் விஜய் சேதுபதியும் இணைய உள்ளார்.

இந்தியில் அமீர்கான் தொகுத்து வழங்கிய சத்யமேவ ஜெயதே போன்ற ஒரு நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்துவழங்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

சமுகத்தில் நல்ல விஷயங்களைச் செய்பவர்களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கும் நிகழ்ச்சி சத்யமேவ ஜெயதே. விஜய் சேதுபதிக்கு 'மக்கள் செல்வன்' என்ற பெயர் ஏற்கனவே இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு மிகப் பொருத்தமாக இருப்பார் என பிரபல தொலைக்காட்சி சேனல் நிர்வாகம் அவரை அனுகியுள்ளது.

தொடர்ச்சியாக படங்களில் நடித்துவருவதால் ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய விஜய் சேதுபதி, நிகழ்ச்சியின் நல்ல நோக்கத்தை புரிந்துகொண்டு ஒத்துக்கொண்டார் எனக் கூறப்படுகிறது. விஜய் சேதுபதிக்கு தற்போது எட்டு படங்கள் கைவசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.