சில்மிஷம் பண்ண நினைக்கிறவங்களுக்கு இது பயத்தை கொடுக்கும் சனுஷாவை பாராட்டிய கேரள டிஜிபி

திருவனந்தபுரம் : தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் நடிகை சனுஷா. சமீபத்தில் வெளியான 'கொடிவீரன்' படத்தில் சசிகுமாருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

சனுஷா சமீபத்தில் கேரளா கண்ணூரிலிருந்து, திருவனந்தபுரத்திற்கு விரைவு ரயிலில் இரவுப் பயணம் செய்யபோது பாலியல் தொந்தரவுக்கு ஆளானார்.

அப்போது, அந்தக் குற்றவாளியை அங்கிருந்தவர்களின் உதவியுடன் பிடித்து போலீஸில் ஒப்படைத்தார் சனுஷா. இதற்காக கேரள டிஜிபி சனுஷாவை பாராட்டியுள்ளார்.

தமிழ், மலையாளம் உள்பட சில மொழிகளில் நடித்து வருபவர் நடிகை சனுஷா. சில தினங்களுக்கு முன் கேரளாவில் ரயிலில் இவர் பயணம் செய்தபோது, இவரிடம் இளைஞர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபடவே, அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.

டிடிஆர் அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு போன் செய்து ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதற்கிடையே அந்த நபர் தப்பிச் செல்லாமல் பார்த்துள்ளார் சனுஷா. அரை மணிநேரத்தில் ரயில்வே போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.

'யாரும் உதவிக்கு வராவிட்டாலும் பரவாயில்லை பாலியல் தொல்லை கொடுத்தவனை சும்மாவிடக் கூடாது என்று முடிவு செய்தேன். அவன் கையை பிடித்து முறுக்கிவிட்டேன்' என சனுஷா தெரிவித்துள்ளார். தனக்கு நடந்த சம்பவம் குறித்து பத்திரிக்கைக்கும் அவர் பேட்டி கொடுத்தார்.

 

மேலும் நீதிக்காக தொடர்ந்து போராடுவேன் எனவும் கூறினார். தற்போது கேரளா காவல் துறை டிஜிபி அவரை திருவனந்தபுர தலைமை அலுவலகத்துக்கு அழைத்து அவரின் துணிச்சலான முடிவுக்கு பாராட்டு தெரிவித்தார்.

சனுஷாவின் துணிச்சலான நடவடிக்கையை கேரள டிஜிபி லோக்நாத் பெஹ்ரா பாராட்டியுள்ளார். சனுஷாவின் இந்த செயல், தவறு செய்பவர்களுக்கு எச்சரிக்கை தருவதாகவும், தவறு செய்பவர்களை கண்டு அஞ்சாமல் தைரியமாக முடிவெடுக்க பெண்களுக்கு ஊக்கம் தருவதாகவும் அமைந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.