இம்புட்டு நேர்மையா இருக்கீங்களேய்யா பலூன் டீமை பாராட்டிய ரசிகர்கள்

சென்னை : ஜெய், அஞ்சலி, யோகிபாபு, ஜனனி ஐயர் ஆகியோர் நடிப்பில் சினிஷ் இயக்கத்தில் வெளிவந்த திகில் திரைப்படம் 'பலூன்'. ரொமான்ஸ் காமெடி வேடங்களில் கலக்கிக்கொண்டிருந்த ஜெய் இந்தப் படத்தின் மூலம் ஹாரர் திரைப்படத்தில் அறிமுகமாகி இருக்கிறார்.

ஒரு படம் வெளிவந்த மறுநாளே அந்தப் படத்தை சூப்பர் வெற்றி, சாதனை வெற்றி, பிளாக் பஸ்டர் வெற்றி என விளம்பரப்படுத்துவார்கள். படம் வெளியான முதல் நாளில் அந்தப் படத்திற்குக் கிடைக்கும் வரவேற்பை வைத்து அது எப்படிப்பட்ட வெற்றியை அடையப் போகிறது என அப்படத்தின் தயாரிப்பாளராலும் கணிக்க முடியாது.

இருந்தாலும் தமிழ் சினிமாவில் ஓடாத படத்தையும், வசூலாகாத படத்தையும் கூட சூப்பர்ஹிட், சாதனை வசூல் என விளம்பரப்படுத்துவது தான் வழக்கம். ஒரே ஒரு தியேட்டரில் ஒரு ஷோ ஓட்டிவிட்டுக் கூட வெள்ளிவிழா கொண்டாடிய படங்களும் இருக்கின்றன.

கடந்த டிசம்பர் மாதம் 29-ம் தேதி வெளியான 'பலூன்' படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இருந்தாலும் சில தியேட்டர்களில் அந்தப் படம் 25-வது நாளைக் கடந்துள்ளது. அதை முன்னிட்டு நேற்று படத்தின் 25-வது நாளுக்கு 'சுமாரான வெற்றி' என விளம்பரப்படுத்தி ஆச்சரியப்படுத்தி உள்ளார்கள்.

தமிழ் சினிமாவில் இதுவரை தங்களது படத்தை சுமாரான வெற்றி என யாருமே வெளிப்படையாகச் சொன்னதில்லை. அந்த விதத்தில் பலூன் குழுவினரின் நேர்மை பாராட்டுக்குரியதுதான். 'சுமாரான வெற்றி' என வெளியான விளம்பர கட்டிங்கை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்கள் பலரும் பாராட்டியிருந்தார்கள்.

நிக்கி கல்ராணிக்கு விக்ரம் பிரபு கொடுத்த சுமை